Published:Updated:

`அ.தி.மு.க பிரமுகரின் உயிரைக் காப்பாற்றிய நாய்!' -தேர்தல் விரோதத்தில் நடந்த நள்ளிரவு தாக்குதல்

திருச்சி, மணப்பாறை அருகே அ.தி.மு.க வேட்பாளரின் மாமனார் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சீரங்கன்
தாக்குதலுக்கு உள்ளான சீரங்கன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது மேற்கு கல்லுப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சீரங்கன் (63). இவருக்கு சின்ராஜ் அம்மாள் என்கிற மனைவியும் ராமசாமி எனும் மகனும் உள்ளனர்.

சீரங்கன்
சீரங்கன்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சீட் சீரங்கனின் மருமகளான சுந்தரவல்லி ராமசாமி என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரவல்லி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சீரங்கன் மனுத் தாக்கல் செய்தார். இறுதியாக, மருமகளுக்காக வேட்புமனுவை வாபஸ் வாங்கிய சீரங்கன் மற்றும் அவரது குடும்பத்தார், சுந்தரவல்லியின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்து வந்தனர்.

சீரங்கனுக்கு வையம்பட்டி அடுத்த மேற்கு கல்லுப்பட்டி பிரதான சாலையில் ஒரு வீடும் வேறு சில இடங்களில் தோட்ட வீடுகளும் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரத்தை முடித்த கையோடு வீடு திரும்பியவர், தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவு வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார்.

சுந்தரவல்லிக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாக உள்ளதால் அனுதாப வாக்குகளைக் குறிவைத்து சீரங்கன் இப்படிச் செயல்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.
அ.தி.மு.க நிர்வாகிகள்

அப்போது பதுங்கியிருந்த மர்மக் கும்பல் ஒன்று, சீரங்கன் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவியதுடன், கயிற்றை அவரது கழுத்தில் மாட்டி நெரித்துக் கொல்ல முயற்சி செய்துள்ளது.

அதற்குள் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், மர்ம நபர்களைப் பார்த்து தொடர்ந்து குரைத்துள்ளது. தொடர்ந்து சீரங்கனின் கழுத்தை இறுக்கியபடி மர்மநபர்கள் இருக்கவே, நாயும் விடாமல் குரைத்துக்கொண்டே அவர்கள் மீது பாய்ந்தது.

Vikatan

இதில் பயந்துபோன மர்ம நபர்கள் கயிற்றுடன் சீரங்கனை இழுத்துச் சென்று சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர்.

தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்துவந்த அக்கம்பக்கத்தினர் சீரங்கனை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீரங்கன்
சீரங்கன்

இந்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த வையம்பட்டி காவல் நிலைய போலீஸார் சீரங்கன் மீதான கொலைவெறித் தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து அவரை அ.தி.மு.க-வினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கட்சிக்காரர்கள் சிலர், ``மர்ம நபர்களின் தாக்குதலுக்கு உள்ளான சீரங்கன் சாலையில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை அந்தவழியாக வந்த பால்காரர் ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சுந்தரவல்லிக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாக உள்ளதால் அனுதாப வாக்குகளைக் குறிவைத்து சீரங்கன் இப்படிச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்கின்றனர்.

வரும் வெள்ளிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க வேட்பாளரின் மாமனார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் விவாதமாகியிருக்கிறது.