Published:Updated:

`ஏய்..வீட்டுல வைச்சு சாராயமா விக்கறே?' -திருச்சி போலீஸ் நடவடிக்கையால் விபரீத முடிவெடுத்த பார் ஊழியர்

உயிரிழந்த ரவிக்குமார்
உயிரிழந்த ரவிக்குமார்

போலீஸாரின் மிரட்டலுக்குப் பயந்து தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றஞ்சாட்டுகிறார் திருச்சியைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்.

திருச்சி, மேலகல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவில் வசித்து வந்தவர் ரவிக்குமார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் சபரீஸ்வரன், மதுமிதா என இரு குழந்தைகளும் உள்ளனர். அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையின் பார் ஒன்றில் ரவிக்குமார் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பார் நடத்தத் தடைவிதித்திருந்ததால், ரவிக்குமார் வேலையில்லாமல் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவிக்குமாரின் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான பொன்மலைப்பட்டி போலீஸார், வீட்டில் மதுவிற்பதாகக் கூறி, அவரின் மனைவியை மிரட்டியதாகவும் தொடர்ந்து வழக்கிலிருந்து தப்பிக்கப் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த  ரவிக்குமார்
உயிரிழந்த ரவிக்குமார்

இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி, போலீஸாரின் மிரட்டலுக்குப் பயந்த ரவிக்குமார் விஷம் குடித்துவிட, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ரவிக்குமார் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ரவிக்குமார் சாவுக்கான உண்மையான காரணங்களை போலீஸார் மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய ரவிக்குமாரின் மனைவி சித்ரா, `` என் கணவர் மதுக்கடை பாரில் வேலை செய்வதால், கூடுதலாகவே குடிக்கும் பழக்கமுடையவர். அதனால், வீட்டுக்கும் கொண்டுவந்து குடிப்பார். இனி அவரைத் திருத்தமுடியாது என விட்டுவிட்டேன். இப்படியிருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் பரணிதரன் உள்ளிட்ட போலீஸார் வந்தனர். அந்த நேரத்தில் என் கணவர் வெளியே போயிருந்தார்.

அப்போது இன்ஸ்பெக்டர், ` ஏய்.. வீட்டுல வைச்சு சாராயம் விக்கிறீங்களா.. இதற்கு வேற தொழில் பார்க்கலாமே?' என்றதுடன், கடுமையான வார்த்தைகளால் பேசினார். அதை ஊரே வேடிக்கை பார்த்துச்சு. நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. தொடர்ந்து நான், `என் புருசன் தவறு செய்தால் அவரைக் கைது செய்துகொள்ளுங்கள்' என்றேன்.

 சித்ரா
சித்ரா

`அவனைக் கைதுசெய்தால் நீதானே ஜாமீன் எடுப்ப.. உங்களை உண்டு இல்லன்னு செய்கிறோம் பார்' என்றதுடன், வீட்டில் இருந்த மதுபாட்டில்களை என்னை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். தொடர்ந்து மிகக் கேவலமாகப் பேசிவிட்டு போனார். மாலை வீட்டுக்கு வந்த அவரிடம், நடந்ததை அக்கம் பக்கத்தினர் சொல்லவே, மனமுடைந்து எலிபேஸ்ட் சாப்பிட்டுவிட்டார். தொடர்ந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தாலும், அவரைக் காப்பாற்ற முடியல. இப்போது போலீஸார், இரவோடு இரவாக அவரின் பூர்வீக ஊரான ஜெயங்கொண்டத்துக்கு எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்துறாங்க.

தொடர்ந்து எதை எதையோ சொல்லி நடந்த சம்பவத்தை போலீஸார் மறைக்கப் பார்க்கிறார்கள். அவர் பாரில் வேலை செய்தாலும், நாங்கள் உழைத்துதான் சாப்பிட்டோம். அநியாயமாக போலீஸார் எங்களை மிரட்டி அசிங்கப்படுத்தியதால், அவரோட உயிரைப் பறிச்சிட்டாங்களே” எனத் தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

`ஊரடங்கில் மது விற்பனை; ரூ.1.44 கோடி அபராதம்!' - கதிகலங்கும் கரூர் டாஸ்மாக் ஊழியர்கள்

தொடர்ந்து ரவிக்குமார் குடும்பத்துக்கு ஆதரவாக ம.க.இ.க மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, நம்மிடம் பேசிய போலீஸார், `` மதுக்கடையில் உள்ள பாரில் வேலை செய்துவந்த ரவிக்குமார் வீட்டில் மதுபாட்டில்கள் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்தார். அதன்காரணமாக பல முறை அவர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பவத்தன்று, ரவிக்குமார் மீண்டும் மதுவிற்பதாக தகவல் கிடைக்கவே போலீஸார் அவரின் வீட்டுக்குப் போனார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு
திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு

ஆனால், ரவிக்குமாரின் தற்கொலைக்கு போலீஸார் காரணமல்ல. இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீஸார் வீட்டுக்கு வந்து போனதால் கோபமடைந்த சித்ரா ரவிக்குமாரை கடுமையாகத் திட்டியுள்ளார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ரவிக்குமார் விஷம் குடித்ததாக எங்களிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளோம்” என்றனர்.

இந்த நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான இன்ஸ்பெக்டர் பரணிதரன் பொன்மலை குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி மாநகர மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜு உத்தரவிட்டுள்ளார்.

ரவிக்குமார் இறப்பு குறித்த சர்ச்சை திருச்சி போலீஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு