இடத்தகராறில் தந்தை, மகனை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்கூட இடத்தகராறில் ஒருவரை ஐந்து பேர்கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள் மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது திருச்சி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் நடு இருங்களுரைச் சேர்ந்த அந்தோனிராஜின் மகன்கள் ஆரோக்கியசாமி, ரோக்குராஜ். இருவரும் விவசாயிகள். இவர்கள் இருங்களூர் நடுகரை ஆற்றோரப் பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தில் சில பகுதிகளைப் பிடித்து விவசாயம் செய்துவந்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாதை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அண்ணன் ஆரோக்கியசாமியை, தம்பி ரோக்குராஜ் வெட்டிப் படுகொலை செய்தார்.
இந்தக் கொலை வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ரோக்குராஜின் சிறைத் தண்டனை முடிவுற்றதால் கொஞ்சம் நாட்களுக்கு முன்னர்தான் வெளியே வந்திருக்கிறார். ரோக்கு ராஜுக்கு ஜான்டேவிட் என்ற மகன் இருக்கிறார். அவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதேபோல ஆரோக்கியசாமிக்கு ஜேசுராஜ் (55) என்ற மகன்... ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு வண்டி செல்வதற்குப் பாதை அமைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஜேசுராஜ் பாதை விடாததால் ரோக்குராஜ் பாதையை முள் வெட்டி அடைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஜேசுராஜும், அவர் மகன் பிரின்ஸும் சேர்ந்து ரோக்குராஜையும், அவர் மகன் ஜான்டேவிட்டையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில், ஜேசுராஜும் அவர் மகன் பிரான்ஸிஸும் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே பாளைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த புகழேந்தியை இடத்தகராறு காரணமாக ஐந்து பேர்கொண்ட கும்பல் இரவு நேரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. அந்தச் சம்பவத்தின் பதற்றம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்திருப்பதால் திருச்சி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.