Published:Updated:

3 மனுக்கள்; 30 நாள்களாகத் தவிக்கும் திருச்சி போலீஸ்! - கர்நாடக போலீஸ் பிடியில் திருவாரூர் முருகன்

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை நடந்து 30 நாள்களுக்கு மேலாகியும், தமிழக போலீஸாரால் முருகனை நெருங்கவே முடியவில்லை.

murugan
murugan

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த மாதம் 2-ம் தேதி, கொள்ளை நடந்தது. இந்த விவகாரத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் அருகே, கடந்த 3-ம் தேதி இரவு, போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், இருவர் பிடிபட்டனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

போலீஸ் பிடியில் மணிகண்டன், கனகவள்ளி
போலீஸ் பிடியில் மணிகண்டன், கனகவள்ளி

அடுத்தநாள் 4-ம்தேதி அதிகாலையில்தான், தப்பியோடியவர் திருவாரூர் முருகன் எனும் கொள்ளையனின் மைத்துனர் சுரேஷ் என்பது தெரியவந்தது. கூடவே, லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் 4.5 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் திருவாரூர் முருகன் குறித்துப் பலருக்கும் தெரியவந்தது.

இந்தக் கும்பல் மீது, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கிராமப்புற வங்கிகள், பாதுகாப்பற்ற நகைக்கடைகள் ஆகியவற்றைக் குறிவைத்து இந்தக் கும்பல் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

இதுவரை பெரிய கொள்ளை சம்பவங்களை முருகன் கும்பல் நடத்தியிருந்தாலும், அவர்களின் சொந்தக்காரர்களை போலீஸார் நெருங்கியதில்லை. ஆனால் இந்தமுறை, உறவினர்களைத் தூக்கிவிட்டனர். போலீஸாரிடம் சிக்கிக்கொண்ட அவர்களைக் காப்பாற்றவே கடந்த மாதம் 9-ம் தேதி சுரேஷ் சரணடைந்தார். 10-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரணடைந்தார்.

அப்போதுதான், அடையாளம் தெரியாத அளவுக்கு முன் பல் மற்றும் தலைமுடியை முருகன் மாற்றியிருந்ததுடன், பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்த விஷயமே போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

நீதிமன்றத்தில் சரணடைந்த முருகன், கர்நாடக போலீஸாருடன் திருச்சி வந்து, கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொடுத்தார். தொடர்ந்து, கர்நாடக போலீஸாரின் கஸ்டடியில் அவர் உள்ளார். இன்னமும் தமிழக போலீஸாரின் வசம் முருகன் ஒப்படைக்கப்படவில்லை. கொள்ளிடத்தில் கைப்பற்றப்பட்ட நகைகளும் வந்துசேரவில்லை.

இந்நிலையில், முருகன் கூட்டாளிகளைக் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில், திருச்சி லலிதா ஜுவல்லரி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் கொள்ளைபோன பாதி நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில், முருகனின் கூட்டாளிகள் கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூலம் புதைத்துவைத்திருந்த நகைகள் சிக்கியுள்ளன.

`நகைகளைப் புதைக்கும் ஸ்டைல்; ட்ரம் நிறைய பணம்!' -திருவாரூர் முருகன் மனைவி சொல்லும் சீக்ரெட்

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை நடந்து 30 நாள்களுக்கு மேலாகியும், தமிழக போலீஸாரால் முருகனை நெருங்கவே முடியவில்லை. அந்தளவுக்கு கர்நாடக போலீஸார் பாதுகாப்புக் கேடயமாக இருக்கிறார்கள். கர்நாடகாவில், முருகன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் அடுத்தடுத்து முருகனை ஆஜர்படுத்தும் கர்நாடக போலீஸார், அவரைக் கஸ்டடியில் எடுத்து விசாரித்துவருகின்றனர். தமிழக போலீஸாரும், முருகனைக் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மூன்று மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. `முருகன் எப்போது தங்களுடைய கஸ்டடிக்குள் வருவார்?' எனத் தமிழகக் காவல்துறை காத்துகிடக்கிறது.