Published:Updated:

மதுரை மலையடிவாரத்தில் சிக்கிய 3 கிலோ தங்கம்! -திருச்சி போலீஸைப் பதறவைத்த முருகனின் கூட்டாளிகள்

திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் புதைத்து வைத்திருக்கும் தங்க நகைகளைத் தோண்டியெடுக்க ஆரம்பித்துள்ளனர் போலீஸார். 

சுரேஷ்
சுரேஷ்

கடந்த 11-ம் தேதி, லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார் திருவாரூர் முருகன். அவரைத் தமிழக போலீஸார் விசாரணைக்கு எடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அதனால், திருச்சி தனிப்படை போலீஸார் முருகனின் மைத்துனர் சுரேஷ் மற்றும் கணேசன் ஆகியோரைக் கஸ்டடி எடுத்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

சிசிடிவி ஸ்கெட்ச், நெட்ஃப்ளிக்ஸ் மாஸ்க், ஃபேஸ் சர்ஜரி! `லலிதா’ முருகனின் திடுக் திட்டங்கள்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில், சுரேஷிடம் திருச்சி மாநகர போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கணேசன்
கணேசன்

தொடர்ந்து, திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைக்காக திருச்சி சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார், கணேசனைக் கஸ்டடி எடுத்தனர். இவர் கடந்த 7 நாள்களாக போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார். மேலும், அவரை 6 நாள்கள் விசாரிக்கத் திருச்சி ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகாமசுந்தரி அனுமதி வழங்கியுள்ளார்.

இதேபோல் கடந்த 23-ம் தேதி, சுரேஷிடமும் ஏழு நாள்கள் விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கணேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் திருச்சி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

murugan
murugan

போலீஸாரின் விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் கும்பல் கொள்ளையடித்த நகைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கணேஷ் கூறிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க நகைகளை திருச்சி சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த நகைகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் லலிதா ஜூவல்லரி நகைகள் என்பதும் மீதி நகைகள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நகைகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட லலிதா ஜூவல்லரி நகைகளை, அந்த வழக்கை விசாரித்துவரும் திருச்சி மாநகர தனிப்படை போலீஸார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர்.

`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்?'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்!

முதல்கட்டமாக, மலையடிவாரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் திருச்சி ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதால் இன்னும் ஏராளமான தங்க நகைகள் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.