Published:Updated:

திருச்சி: `மனநலம் பாதித்த பெண் வன்கொடுமை; ஹெச்.ஐ.வி நாடகம்!' - சிக்கிய ஆட்டோ கும்பல்

பாதிக்கப்பட்ட மனநலம் பாதித்த பெண்
பாதிக்கப்பட்ட மனநலம் பாதித்த பெண்

சிறைச்சாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக வன்கொடுமை சம்பவத்தில் கைதான முஸ்தபா, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவர்கள், தங்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக போலீஸாரிடம் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

திருச்சி, அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஆபீஸர் காலனி பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக லூத்ரேகா மேரி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சுற்றித் திரிந்திருக்கிறார். இந்தநிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் அதிகாலையில், அரசு மருத்துவமனைக்கு அருகேயிருக்கும் தனியார் ஹோட்டல் வாசலில் மயக்கமான நிலையில் மேரி கிடந்திருக்கிறார். அந்தக் கடையில் வேலை பார்த்த சமையல் மாஸ்டர் கார்த்திக், அருகில் சென்று பார்த்தபோது ரத்தக் கறைகளுடன் துணிகள் ஏதும் இன்றி மயக்கமான நிலையில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தபோது ஒரு ஆட்டோவில் நான்கு ஆண்கள் இருப்பதைப் பார்த்து அங்கே சென்று பார்த்திருக்கிறார். அப்போது போதையிலிருந்த அவர்கள், கார்த்திக்கைப் பார்த்தவுடன் ஆட்டோவை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அதன் பின்னர் மேரியை சாலை ஓரத்தில் வசித்துவருபவர்களும், வேறு சிலரும் தூக்கி, அவருக்கு மாற்று உடைகளைக் கொடுத்து அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

திருச்சி எஸ்.பி ஆபீஸ்
திருச்சி எஸ்.பி ஆபீஸ்

மேலும், சமையல் மாஸ்டர் கார்த்திக் இது குறித்து அவருடைய நண்பரான ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவரும் உதவியிருக்கிறார். அருகிலிருந்தவர்களையும், அரசு மருத்துவமனை முன்பாக அமைந்திருக்கும் ஆதரவற்றவர்கள் சிலரையும் விசாரித்தபோது, அந்தப் பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கடந்த ஐந்து நாள்களாக ஆட்டோவில் கூட்டிச் செல்வதும், கொண்டு வந்து விடுவதுமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் ஆட்டோவில் வரும் கும்பலைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள்.

கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்

ஆனால், சுதாரித்துக்கொண்ட ஆட்டோ கும்பல் வரவில்லை. அதன் பின்னர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு எண்ணான 100-க்கு இருவரும் நேற்று காலை தகவல் கொடுத்திருக்கிறார்கள். மேலும், மேரியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இந்த அளவுக்குக் கொடுமை செய்திருக்கும் கும்பலைக் கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு போலீஸார் தேடிவந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

இந்தநிலையில், திருச்சி வழக்கறிஞர்கள் மூலமாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயா தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். போலீஸார் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த சிவா, முஸ்தபா ஆகிய இரண்டு நபர்களைக் கைதுசெய்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்
திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்

அப்போது முஸ்தபா, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாகச் சொல்லி காவலர்களைப் பரபரக்க வைத்தார். இதையடுத்து, போலீஸார் அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று இல்லை என்று மருத்துவர்கள் சான்று அளித்தனர். சிறைச்சாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, வன்கொடுமைச் சம்பவத்தில் கைதான முஸ்தபா, தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர், முஸ்தபா திருச்சி மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு