திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த அதவத்தூர் சிவா நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டட ஒப்பந்தப் பணியாளராகச் செயல்பட்டு வருகிறார். அரசியல் ஆர்வம் காரணமாக இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து சக்திவேல், அந்த அமைப்பின் மணிகண்டம் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, சக்திவேல் வீட்டின்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக சக்திவேல் திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், `வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கியதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின்மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதுடன், நான் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் தீவைத்து கொளுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, போலீஸார் சக்திவேலின் வீடு உள்ள அதவத்தூர் சிவா நகரில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, போலீஸாரே அதிர்ந்துபோகும் அளவுக்குக் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஏனெனில் பைக்கை மதவாதிகள் எரித்துவிட்டதாகக் கூறி புகார் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகி சக்திவேல், அவரது ஆதரவாளர்களான முகேஷ், சக்திவேல் உள்ளிட்டோருடன் இணைந்து பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது அம்பலமானது. அதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்து முன்னணி நிர்வாகி சக்திவேல், ``அரசியலில் உயர் பதவிகளை அடைவதற்குப் பிரபலமாக வேண்டும் என நினைத்தேன். மேலும், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை தரமுடியாத நிலையிலும், பைக் லோன் கட்ட முடியாத நிலையில் கஷ்டப்பட்டேன்.

இதனிடையே, சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவருவதால், எனது பைக்கை நானே கொளுத்திவிட்டு, மர்ம நபர்கள் கொளுத்தியதாக நாடகமாடினால், பிரபலமாகிவிடலாம். உதவிகளும் கிடைக்கும் என முடிவு செய்து பைக்கை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினேன். என்னுடைய போதாத காலம், சிசிடிவி கேமராக்களும், பைக் எரிவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதும் எங்களை காட்டிக் கொடுத்துவிட்டது” என்றாராம். கட்சியில் பிரபலமடைய இந்து முன்னணி நிர்வாகி ஒருவர், தனது பைக்கை கொளுத்திவிட்டு நாடகமாடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.