Published:Updated:

சாலையில் பட்டாசு... பட்டாக்கத்தியுடன் கார்களில் ஊர்வலம்! - திருச்சியில் ரௌடிகள் அட்ராசிட்டி

ரௌடி குருமணிகண்டன்
ரௌடி குருமணிகண்டன்

`இதைத் தட்டிக்கேட்ட காவல்துறையையே மிரட்டுகிறார்கள் என்றால் கொஞ்சம்கூட போலீஸார் மீது பயம் இல்லாமல் இருக்கிறார்கள்.'

குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ரௌடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகர் முழுவதும் காரில் வலம்வந்த 100 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பட்டா கத்தியோடு போஸ் கொடுக்கும் ரௌடி
பட்டா கத்தியோடு போஸ் கொடுக்கும் ரௌடி

கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த குருமணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று இரவு பிணையில் வெளியில் வந்தார். அப்போது திருச்சி வீரமுத்தரையர் முன்னேற்றக் கழகத் தலைவர் செல்வகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் அணிவகுத்து அவருக்கு வரவேற்பு அளித்து, கூச்சலுடன் திருச்சி ஒத்தக்கடை பகுதி வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர், அங்கிருக்கும் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிகளை சாலையின் நடுவே வெடித்ததுடன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன், அவர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

ரௌடி குரு மணிகண்டன்
ரௌடி குரு மணிகண்டன்

அதையும் பொருட்படுத்தாமல், அவர்கள் காவல் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைச் சூழ்ந்துகொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாநகர் முழுவதும் கூச்சலுடன் வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். திருச்சி மத்தியச் சிறையிலிருந்து கரூர் பைபாஸ் சாலை வரை 50-க்கும் மேற்பட்ட கார்களில் தொங்கியபடி கூச்சலிட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக ஊர்வலமாகச் சென்றனர்.

கடலூர் டு வேலூர்... 5 வழக்குகளில் ஆஜர்! - நீதிமன்றத்துக்கு ஆம்புலன்ஸில் வந்த ரௌடி ஜானி

இதையடுத்து அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொரோனா தொற்றுக்குக் காரணமான வகையில் கூட்டம் கூடியது, காவல்துறையிடம் கடுமையாக நடந்துகொண்டு பேரணியாகச் சென்றது என... வீரமுத்தரையர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் செல்வகுமார் மற்றும் பிணையில் வெளிவந்த குருமணிகண்டன் உள்ளிட்ட 100 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் வெடி
பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் வெடி

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ``திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. சமுதாயத் தலைவர்கள் சிலர் இது போன்ற ரௌடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால், அவர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் மணிகண்டன் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரௌடி குருமணிகண்டன்
ரௌடி குருமணிகண்டன்

இந்தக் காரணத்தால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வெளியே வந்தபோதுதான் இவ்வளவு அட்ராசிட்டி செய்திருக்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்ட காவல்துறையையே மிரட்டுகிறார்கள் என்றால், கொஞ்சம்கூட போலீஸார் மீது பயம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இது போன்ற ரௌடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு