Published:Updated:

``நாங்க மட்டும் பொறுப்பல்ல... நீங்களும்..?!” - திருச்சி காவல்துறை

`நகைக்கொள்ளையர்கள் பிடிபட்டாலும் நகைகள் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்’

திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்
திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்

கடந்த சில மாதங்களாக திருச்சியில் முகாமிட்டிருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள், பல்வேறு வங்கிகள் மற்றும் நகைக் கடைகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டது அம்பலமானது. இவர்கள், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளிட்டவற்றில் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள, லலிதா ஜூவல்லரி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கொள்ளை சம்பவங்களால், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், பொதுமக்களை அலர்ட் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், திருச்சி நகைக்கடைகளில் உள்ள பாதுகாப்புகுறித்து ஆய்வு செய்துவருகிறார்.

திருச்சி மாநகர காவல்துறை ஆலோசனை
திருச்சி மாநகர காவல்துறை ஆலோசனை

நேற்று மாலை 7 மணியளவில், திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சங்கம் ஹோட்டலில், திருச்சியில் உள்ள நகைக்கடை மற்றும் அடகுக் கடை உரிமையாளர்களுடன், திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருச்சி காவல் துணை ஆணையர் மயில்வாகனன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பலரும் நகைக் கடை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

திருச்சி டி.சி. மயில்வாகனன், “திருச்சி மாநகரில் மட்டும் 104 நகைக் கடைகள், 259 அடகுக் கடைகள், 161 வங்கிகள், 86 நிதிநிறுவனங்கள், 360 ஏ.டி.எம்-கள்மற்றும் 30 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க 14 காவல் நிலையங்கள்,14 ரோந்து வாகனங்களே உள்ளன. இதுமட்டுமல்லாமல், 50 புறக்காவல் மையங்கள் அமைத்துள்ளோம். கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு போலீஸார் மேலும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரம் முழுக்க 1,700 சி.சி.டி.வி கேமராக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 கேமராக்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

திருச்சி மாநகர காவல்துறை ஆலோசனை
திருச்சி மாநகர காவல்துறை ஆலோசனை

திருச்சி மாநகரம், மொத்தமே 167 சதுர கிலோமீட்டர்தான். ஆனால், நாங்கள் 175 சதுர கிலோ மீட்டருக்கு சிசிடிவி கேமராக்களை இணைக்க இணைப்புகள் கொடுத்துள்ளோம். இதுமட்டுமல்லாமல், திருச்சி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்னும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளோம்” என்றார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், “திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல், கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்கள், திருச்சியில் மேலும் மூன்று இடங்களில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த இடங்களில் அலாரம் அடித்ததால் ஓடிவிட்டார்கள். கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்தால்கூட அவர்களிடம் முழுமையான நகையோ அல்லது பணத்தையோ கைப்பற்ற முடியாது. எங்கேயாவது புதைத்துவைத்திருந்தால் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. நகையை உருக்கி விற்றுவிட்டால் கிடைப்பது மிகக் கடினம்.

`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை

குற்றங்களைத் தடுக்கத் தேவையான நடைமுறைகள் உள்ளன. குற்றங்களைத் தடுக்க பொதுமக்களும் பங்களிக்க வேண்டும். காவல்துறையால் குற்றங்களைக் கண்டுபிடிக்க மட்டுமே முடியும். திருச்சி நகைக்கடை சம்பவத்தில் தினம்தினம் பத்திரிகைகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்றைக்கு, கொள்ளையன் முருகன் தொடர்பாக ஏதேனும் புதிய தகவல்கள் உள்ளதா எனக் கேட்கிறார்கள்.

நிறைய நகைக்கடைகளில் லாக்கர் மற்றும் சிசிடிவி கேமரா வசதிகளே இல்லை. கட்டாயம் லாக்கர் வைப்பது அவசியம். அதேபோல நகைக்கடை நடத்துபவர்கள் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வதும் மிக முக்கியம்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்
திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்

எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். குற்றவாளிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தயாராக இருங்கள். கடந்த 30 ஆண்டுகளாக வாகனம் ஓட்டுபவர் விபத்தில் சிக்காமல் இருப்பார் என்றால், இனியும் சிக்க மாட்டார் என்பது நிச்சயம் இல்லை. சிசிடிவி போன்ற பாதுகாப்பு அம்சங்களை நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல், நகை மற்றும் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை நீண்ட காலம் அழியாமல் வைத்திருக்கும் அளவிற்கு ஸ்டோரேஜ் ஏற்படுத்துங்கள். அதற்கான நிறைய வழிமுறைகள் தற்போது வந்துவிட்டன. குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு போலீஸாருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உள்ளது” என முடித்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “நாம் எல்லோரும் எதுவும் நடக்காதவரை பேசாமல் இருப்போம். ஏதாவது நடந்தபிறகுதான் யோசிப்போம். அப்படியான மன நிலையில் வாழ்கிறோம். பாதுகாப்புக்காக முறையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தால், திருச்சி நகைக் கடையில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்?'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்!

திருச்சியில் நடந்தது இந்தியாவில் உள்ள அனைவருக்குமான பாடம். பெயருக்கு சிசிடிவி கேமராக்களை வைக்காதீர்கள். வருமுன் காப்பதே மிகச் சிறந்தது. முன்னெச்சரிக்கையாக இருங்கள்” என எச்சரித்தார்.

லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு, பொதுமக்களை அலர்ட் செய்யும் பணிகளை திருச்சி போலீஸ் தொடங்கியுள்ளது.