Published:Updated:

`பெரிய நகைகளை முதலில் எடு…!' - திருச்சி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி காட்சிகள்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளை நடைபெற்று, இன்றுடன் ஏழு நாள்கள் ஆகிவிட்டன. கொள்ளையில் ஈடுபட்ட முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் குறித்து வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சி ரகம்.

lalitha jewellery Robbery
lalitha jewellery Robbery

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் மேற்குப்பக்கச் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் 13 கோடி மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். கடந்த 2-ம் தேதி அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனம் தலைமையில் 7 தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

lalitha jewellery
lalitha jewellery

போலீஸாரின் தீவிர விசாரணையில், நடந்த கொள்ளையை திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா கனகவல்லியின் மகன் சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை தஞ்சாவூர் எடுத்துச் சென்ற அந்தக் கும்பல், அங்குள்ள வனப்பகுதியில் வைத்து நகைகளைப் பங்குபோட்டுள்ளனர்.

அடுத்து போலீஸாரிடமிருந்து தப்பிக்க ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதற்காக தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் நீடாமங்கலத்துக்குச் சென்ற சுரேஷ், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் சுரேஷ் மணிகண்டனை வரவழைத்து இருசக்கர வாகனம் மூலம் வீட்டுக்குச் சென்றார். அப்போது, திருவாரூர் மடப்புறம் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸாரிடம் மணிகண்டன் மட்டும் சிக்கினார்.

மணிகண்டன் பின்னால் உட்கார்ந்து இருந்த சுரேஷ், தான் வைத்திருந்த 4.5 கிலோ நகை வைத்திருந்த பையை அப்பகுதியில் இருந்த முள்வெலியில் தூக்கி வீசிவிட்டுத் தப்பினார். போலீஸாரின் அடுத்தடுத்த விசாரணையில் திருவாரூர் முருகன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட கும்பல் குறித்துப் பல தகவல்கள் வெளியாகின.

lalitha jewellery
lalitha jewellery

இந்த விவகாரத்தில் திருவாரூர் போலீஸார் திருச்சி தனிப்படை போலீஸாருக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முருகனின் அக்காவும் தப்பியோடிய சுரேஷின் தாயுமான கனகவல்லி, முருகனின் அண்ணன் மகன் முரளி மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முருகனின் உறவினர்களான கார்த்திக், திருவாரூரைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் மாறன் உள்ளிட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் திருவாரூரில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த சில நபர்களிடமும், முருகனின் உறவினர்களான பிரதாப் என்பவரின் அம்மா ராஜலட்சுமி, அமுதா உள்ளிட்ட 11 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் தனித்தனியாகப் பிரிந்து, புதுச்சேரி, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுத் தேடி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி நகைக்கடை கொள்ளை குறித்து விகடன் இணையதளத்தில், “கொள்ளைப் பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை!” எனும் தலைப்பிலான கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில் முருகன் கொள்ளையடித்துக் கொண்டுவரும் நகைகளை உருக்கி அதைப் பணமாக மாற்றுவது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தாஸ் என்றும் முருகன் என்பவர் என்.ராஜாம்மாள் ஃபிலிம்ஸ் மற்றும் பாலமுருகன் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களை நடத்தி, சினிமா நடிகைகளுடன் சொகுசாக வாழ்ந்தது குறித்தும் எழுதியிருந்தோம்.

கொள்ளை பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை!
சுரேஷின் தாய் கனகவல்லி
சுரேஷின் தாய் கனகவல்லி

இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகையை உருக்கி விற்பனை செய்த தாஸ் உள்ளிட்ட நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், தற்போது கொள்ளை அடிக்கப்பட்ட 8 கிலோ நகையுடன் முருகன், ஒரு துணை நடிகையுடன் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகின. அக்காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் போலீஸார். அந்த கேமரா பதிவுகளில், சுரேஷ் என்பவர் தன் கையில் கிடைத்த நகைகளை எடுத்து பைகளில் போடுகிறார். இதைக் கவனித்த முருகன், `முதலில் பெரிய நகைகளை எடுத்து வை' எனச் சைகை மூலமாகக் கண்டிப்பது தெரியவந்துள்ளது.

முரளி
முரளி

இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குற்றவாளிகளும் போலீஸாருக்குக் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் காட்டி வருகின்றனர். `இந்த ரேஸில் வெல்லப்போவது யார்?' என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.