Published:Updated:

திருச்சி: தூக்கி வீசப்பட்ட காவலர்... தரமற்ற ஹெல்மெட்டால் இறந்தாரா?! - திருமணமான 20-வது நாளில் சோகம்

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்

திருமணமாகி ஒரு மாதத்துக்குள், ஹெல்மெட் அணிந்திருந்தும் காவலர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணமாகி 20 நாளில் சாலை விபத்தில் காவலர் ஒருவர் பலியான சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தரமற்ற ஹெல்மெட்டால் இறந்துபோனாரா என்று போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ரஞ்சித் குமார்
ரஞ்சித் குமார்

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தார். ரஞ்சித் குமாருக்குக் கடந்த 20 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. புது பல்சர் பைக்கில் (பதிவெண்கூட வாங்கவில்லை) பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி - லால்குடி சாலை தாளக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற பகுதியில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்திருக்கிறது. இதில் ஆட்டோவின் மீது மோதி தூக்கி வீசப்பட்ட ரஞ்சித், ஓர் இரும்புக்கம்பியில் மோதியிருக்கிறார். இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி ஒரு மாதத்துக்குள், ஹெல்மெட் அணிந்திருந்தும் காவலர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தரமற்ற ஹெல்மெட் உயிரிழப்புக்குக் காரணமா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி: தூக்கி வீசப்பட்ட காவலர்... தரமற்ற ஹெல்மெட்டால் இறந்தாரா?! - திருமணமான 20-வது நாளில் சோகம்

இது குறித்து சமூக ஆர்வலர் கார்த்தியிடம் பேசினோம். ``திருச்சி மாநகரில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு சம்பவங்கள், தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், சாலைகளில் திரியும் மாடுகள்தான். கடந்த வாரம்கூட திண்டுக்கல்லிருந்து திருச்சி நோக்கி இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். அப்போது சாலையில் படுத்துக்கிடந்த மாடு திடீரென எழுந்து ஓடிவந்ததைப் பார்த்ததும் மிரண்டும் போய் டூ வீலரில் பிரேக் போட்டிருக்கிறார்கள். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் காவலர் ரஞ்சித் குமார் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஆட்டோ டிரைவர் சாலையில் மாடு வந்திருக்கிறது. அதைப் பார்த்தபடி வண்டியை இயக்கிய நேரத்தில்தான் விபத்து ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தநிலையில், காவலர் ரஞ்சித் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

திருச்சி: தூக்கி வீசப்பட்ட காவலர்... தரமற்ற ஹெல்மெட்டால் இறந்தாரா?! - திருமணமான 20-வது நாளில் சோகம்

அந்த ஹெல்மெட் உடைந்து தலை சிதறி இறக்கிறார் என்றால் இது யாருடைய தவறு... ஹெல்மெட் என்றால் என்ன? நம்முடைய தலையைப் பாதுகாக்கத்தான் ஹெல்மெட் அணிகிறோம். ஆனால் ஹெல்மெட் உடைந்து ஒருவர் இறக்கிறாரென்றால், இது யாருடைய தவறு... தரமற்ற ஹெல்மெட்டைத் தயாரித்த நிறுவனத்தின் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தடுத்த விபத்துகளில் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்” என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு