Published:Updated:

`சொந்தக்காரர்களைக் காட்டி சரணடைய வைத்தார்கள்!'‍- `திருச்சி கொள்ளை வழக்கு' சுரேஷ்

`` `நீ சரணடைந்தால், உனது உறவினர்களை விடுவிக்கிறோம்' என போலீஸார் சொன்னதை நம்பிச் சரணடைந்தேன். ஆனால், போலீஸார் சொன்னபடி நடக்கவில்லை'' என்று திருச்சி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷ் கூறினார்.

சுரேஷ்
சுரேஷ்

கடந்த 2-ம் தேதி அதிகாலை, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 30 கிலோ மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயின. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அடுத்து திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்ட போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

 சுரேஷ்
 சுரேஷ்

போலீஸாரின் அடுத்தடுத்த விசாரணையில், லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மாமா முருகன் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கொள்ளையர்கள் தலைமறைவாகவே, போலீஸார் சுரேஷின் தாய் கனகவள்ளி, அப்பா குணசேகரன், சித்தி அமுதா, சரவணன், மாரியப்பன், முருகனின் அண்ணன் செல்வத்தின் மகன் முரளி, குணா, மாறன் மற்றும் பிரதாப், நகைகளை உருமாற்ற உதவிய நாகப்பட்டினம் காளிதாஸ், மதுரை மகேந்திரன் உள்ளிட்ட 4 பொற்கொல்லர்களை விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர்.

அதில் மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், விசாரணைக்காக அழைக்கப்பட்ட சிலர்மீது திருச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

` காருக்குள் முருகன், 12 கிலோ தங்க நகைகள்!' - கர்நாடக போலீஸை 18 கி.மீ விரட்டிய தமிழக போலீஸ்

ஆனாலும் முக்கிய குற்றவாளிகளான முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸாரால் நெருங்கவே முடியவில்லை. இந்தக் கோபத்தில், பெங்களூரில் இருந்த சுரேஷின் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் போலீஸார் நெருக்கடி கொடுத்தனர்.

சுரேஷின் தாய் கனகவல்லி
சுரேஷின் தாய் கனகவல்லி

இதனால் சுரேஷின் உறவினர்கள் கடிந்துகொள்ள, வழியில்லாமல் சுரேஷ் கடந்த 10-ம் தேதி, வழக்கறிஞர்கள் கிருஷ்ணராஜ் மற்றும் சிவக்குமார் சகிதமாக திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அடுத்தநாள், பெங்களூரில் நடந்த கொள்ளை வழக்கில் முருகன் பெங்களூரு 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

`நடிகைக்கு நெக்லஸ் பரிசு.. இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம்?'- முருகன் குறித்து வாக்குமூலம் கொடுத்த சுரேஷ்!

அவரை அம்மாநில போலீஸார் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறார்கள். முருகனை எப்படியாவது தமிழகம் கொண்டு வரத் திருச்சி தனிப்படை போலீஸார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேஷை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். ஏழுநாள் கஸ்டடியில் முருகன் கும்பலின் கொள்ளையை பட்டியலிட்டுள்ளார் சுரேஷ். இதையடுத்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், சுரேஷ் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகாமசுந்தரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி கொள்ளிடம் டோல்கேட் போலீஸார், சுரேஷை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். முருகனின் கூட்டாளி கணேசனை தனிப்படை போலீஸார் விசாரித்துவருகிறார்கள். அதனால் தற்போதைக்கு சுரேஷை நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முரளி
முரளி

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுரேஷ், ``கொள்ளை வழக்கில் துளியும் தொடர்பில் இல்லாத எனது அம்மா, தம்பி உள்ளிட்ட உறவினர்கள் 18 பேரை போலீஸார் கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். `நீ சரணடைந்தால், உனது உறவினர்களை விடுவிக்கிறோம்' என போலீஸார் சொன்னதை நம்பிச் சரணடைந்தேன். ஆனால், போலீஸார் சொன்னபடி நடக்கவில்லை. அவர்களை போலீஸார் இதுவரை விடுவிக்கவில்லை. அவர்கள் என்ன தவறு செய்தார்கள்” என்று கதறினார்.

இதுகுறித்து திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த விஜயா நம்மிடம், ``குற்றவாளிகள் சரணடைந்துவிட்டார்கள். ஆனால் படிக்கும் என் பேரன் பிரதாப் உள்ளிட்ட பலரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச்சென்றார்கள். அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதுகூட தெரியவில்லை. கடந்த சில வாரங்களாக விசாரணை என்கிற பெயரில் நள்ளிரவில் போலீஸார் கதவை தட்டுகிறார்கள். குற்றவாளிகள் கிடைத்தபிறகும், விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை விடாமல் இருக்கிறார்கள்” என்றார்.