Published:Updated:

அடுத்தடுத்து சிக்கும் நகைகள்!- திருச்சி நகைக்கடை கொள்ளையன் சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்

திருச்சி நீதிமன்றத்தில் நகைக் கொள்ளையில் கைதான சுரேஷை 7 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதனிடையே, பெங்களூரு சென்றுள்ள தனிப்படை அதிகாரிகள், அங்குள்ள நீதிமன்றத்தில் முருகனை விசாரிக்க மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி நீதிமன்றத்தில்  சுரேஷ்
திருச்சி நீதிமன்றத்தில் சுரேஷ்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 48 மணி நேர போலீஸாரின் தீவிர விசாரணையில், திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை விரட்டிப் பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளியும் நகைக்கடைக் கொள்ளையருமான சுரேஷ், தப்பி ஓடிவிட்டார். போலீஸார், மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன.

murugan
murugan

அந்த நகைகள், லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த நகையுடன் ஒத்துப்போனதால், மொத்த நகையும் மணிகண்டனின் கூட்டாளிகளான சுரேஷ் மற்றும் முருகன், கணேஷ் உள்ளிட்ட கும்பல் கொள்ளையடித்ததும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முருகன் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

கடந்த 5-ம் தேதி சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் மணிகண்டன் ஆகியோரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்னிலையில், போலீஸார் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருந்த சுரேஷ், கடந்த 10-ம் தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அடுத்து கடந்த 11-ம் தேதி, பெங்களூரு 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார். பின்னர் அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்து முருகன் கொடுத்த தகவலின்படி, திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4.30 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் கொடுத்த தகவலின்படி, மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த மகேந்திரனிடம் சுரேஷ் 950 கிராம் தங்கத்தைக் கொடுத்து விற்றுத்தரும்படி கூறியதாகவும், அதற்காக 7 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கியதும் தெரிந்தது. மேலும் முருகன் சொன்ன தகவல்படி, நேற்று மாலை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்காரத்தெருவைச் சேர்ந்த கணேசனை கைது செய்த போலீஸார், அவர் வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த ரூபாய் இரண்டு கோடியே முப்பது லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளைக் கைப்பற்றினர்.

திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன்  சுரேஷ்
திருச்சி நீதிமன்றத்தில் கொள்ளையன் சுரேஷ்

மேலும் 6 பேர் கொண்ட திருச்சி தனிப்படை போலீஸார், பெங்களூரு சென்றுள்ளனர். அவர்கள் முருகனிடம் விசாரிக்க அனுமதிகோரி இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளார்கள். இந்த நிலையில், திருச்சி சிறையில் உள்ள சுரேஷ், இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சுரேஷை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸுக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.