Published:Updated:

`திருச்சி பெண்.. திருப்பூரில் காதல்.. திருவண்ணாமலையில் கொலை..!’ - அதிரவைத்த காதலன்

``அவளுக்கும் எனக்கும் திருப்பூரில் பழக்கம் ஏற்பட்டது. சின்ன வாக்குவாதம், ஆத்திரத்தில் கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டேன்” எனப் பெண்ணின் காதலன் கூறியதைக் கேட்டு திருச்சி சமயபுரம் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள ஏழுமலை
கைது செய்யப்பட்டுள்ள ஏழுமலை

புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கும் திருச்சி, சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த சிவரெத்தினம் என்பவருக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த சில வருடங்களாக தனித்தனியே வசித்துவருகிறார்கள்.

murder
murder

அதனால் சிவரெத்தினம் அவரின் பெற்றோர் வீட்டில் மகனுடன் தங்கியிருந்தவர், பெற்றோர் பாதுகாப்பில் மகனை விட்டுவிட்டு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியிலுள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றார். அப்பகுதியிலே தங்கியிருந்த சிவரெத்தினம் அவ்வப்போது திருச்சி சமயபுரத்துக்கு வந்து தன் பெற்றோரையும், மகனையும் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சிலவாரங்களாகச் சிவரெத்தினம் மகனைப் பார்க்க வரவில்லை. அதையடுத்து, அவரது உறவினர்கள் அவர் பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அவரைத்தேடி அலைந்தனர்.

ஆனால், அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்பது குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே அவரது குடும்பத்தார், கடந்த 16 -ம் தேதி திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் காணாமல் போன விவரத்தை அளித்து கண்டுபிடிக்கக் கோரி புகார் கொடுத்தனர். புகாரை வழக்காகப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான போலீஸார் விசாரணையைத் துவக்கினர். காணாமல் போன சிவரெத்தினம் குறித்த தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில், அவரது செல்போன் நம்பரை வைத்து விசாரணையை மேற்கொண்டார்கள். அந்த வகையில் சிவரெத்தினம் செல்போன் எண்ணுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தொடர்ந்து பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள ஏழுமலை
கைது செய்யப்பட்டுள்ள ஏழுமலை

அதனால் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில், உதவி ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளடக்கிய தனிப்படை போலீஸார் திருவண்ணாமலை விரைந்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், தனது வீட்டில் இருந்த ஏழுமலையைப் பிடித்து விசாரித்தபோது. விசாரணையில் அவர் காணாமல் போன சிவ ரெத்தினத்தைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

போலீஸாரிடம் ஏழுமலை, ``சிவாவும் நானும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தோம். அந்தவகையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கொஞ்ச நாள் நட்பாகப் பழகி வந்தோம். அப்போது சிவா, அவரின் கணவருக்கும் அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சொல்லி அழும். அந்தவகையில் அவருக்கு ஆறுதல் சொல்வேன். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. என்னைவிட மூன்று வயது அதிகம், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி பையன் இருப்பதால், சிவா காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். பிறகு அவரின் தனிமை உணர்ந்து என்னை ஏற்றுக்கொண்டார்.

Vikatan

அதையடுத்து, நாங்கள் அவ்வப்போது திருப்பூரிலிருந்து திருவண்ணாமலை வருவோம். எங்கள் வீட்டில் தங்கி உல்லாசமாக இருப்போம். அவ்வப்போது சிவாவிடம் செலவுக்குப் பணம் வாங்குவேன். அந்தவகையில் கடைசியாக எங்க ஊருக்கு அவளை அழைத்து வந்திருந்தபோது, செலவுக்குப் பணம் கேட்டேன். பணம் இல்லை என சொன்னுச்சு. அதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அவளை அடித்தேன். மயங்கி கீழே விழுந்த சிவாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

அடுத்து உடலை மறைக்க ரயில் தண்டவாளத்தில் வீசி விட முடிவு செய்தேன். அதையடுத்து, சிவாவின் உடலை யாருக்கும் தெரியாமல் தண்டராம்பட்டு அருகிலுள்ள பச்ச குப்பம் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு வந்தேன். ரயில் மோதிச் சிதைந்த உடலைக் கைப்பற்றி வேலூரை அடுத்த ஆம்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தார்கள். சிவரெத்தினத்தின் ஊர் திருச்சி என்பதாலும், திருப்பூரில் வேலை செய்ததாலும் நமக்கு இனி பிரச்னை இருக்காது எனக் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், சிவரெத்தினத்தின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போலீஸார் நடத்திய விசாரணையில், சிவரெத்தினத்தின் செல்போனுக்கு அடிக்கடி நான் பேசியதை வைத்து நான் மாட்டிக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிவரெத்தினம்
கொலை செய்யப்பட்ட சிவரெத்தினம்

வாக்குமூலத்தைக் கேட்ட திருச்சி போலீஸார் அதிர்ச்சி அடைந்த நிலையில், சிவரெத்தினம் கொலை செய்யப்பட்டது ஆம்பூர் பகுதி என்பதால், கைதுசெய்யப்பட்ட ஏழுமலையை திருச்சி சமயபுரம் போலீஸார் வேலூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதுவரை சிவரெத்தினம் காணாமல் போனது தொடர்பாகத் தேடி வந்த அவரது பெற்றோர் அவர் உயிரோடு இருப்பதாகவே நம்பியிருந்தனர். ஏழுமலையின் வாக்குமூலத்தைக் கேட்டு சிவரெத்தினம் கொலை செய்யப்பட்டது தெரிந்து அவரது உறவினர்கள் கதறி அழுதார்கள்.

கணவரை விட்டுப் பிரிந்து தன் மகனைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் சிக்கிய சிவரெத்தினம் கொலை செய்யப்பட்டிருப்பது சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.