Published:Updated:

போலி நாக மாணிக்கக்கல்லை விற்க முயற்சி! தலைமறைவான கும்பலில் ஒருவர் கைது!

ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்
ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்

அந்த ஒன்பது பேர் கும்பலில் ஒருவரான ஓட்டப்பிடாரம் இந்திராநகரைச் சேர்ந்த பவித்குமாரைக் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஓசனூத்துவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், தனது ஊரிலுள்ள ஒரு பழைய கட்டடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தன்னை ஒன்பது பேர்கொண்ட கும்பல் அடித்துவிட்டு, தன்னிடமிருந்த ரூ.4,000, இரண்டு செல்போன்களைப் பறித்துவிட்டு ஓடிச் சென்றதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட பவித்குமார்
கைது செய்யப்பட்ட பவித்குமார்

புகார் மனு அளித்த சுப்பிரமணியன், தன்னிடமிருந்து செல்போனையும் பணத்தையும் பறித்துச் சென்றதாகக் கூறப்பட்ட பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த ஒன்பது பேர் கும்பலில் ஒருவரான ஓட்டப்பிடாரம் இந்திராநகரைச் சேர்ந்த பவித்குமாரைக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சுப்பிரமணியன், தன்னிடம் விலையுயர்ந்த நாக மாணிக்கக்கல் இருப்பதாகவும், அதை விற்க வேண்டும் என்று சொன்னதாகவும், பவித்குமார் அழைத்துவந்த 11 பேர் அந்தக் கல்லை வாங்க வந்தாகச் சொல்லி அவரிடமிருந்து அந்தக் கல்லை பறித்துச் சென்றது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரின் விசாரணையில் கூறிய பவித்குமார், ``சுப்பிரமணியன், `என்கிட்ட விலையுயர்ந்த மாணிக்கக்கல் இருக்கு. அதை நல்ல விலைக்கு விக்கணும். ஏதாவது பார்ட்டி இருந்தா கூட்டிட்டு வாங்க’ன்னு என்கிட்டயும், என்னோட நண்பர்கிட்டயும் சொன்னார். நானும் என்னோட நண்பரும், `தூத்துக்குடியில இருந்து 10 பேர் அந்தக் கல்லை பார்க்க வர்றாங்க. பிடிச்சுப் போச்சுன்னா வாங்கிக்குவாங்க.

போலி நாகமாணிக்க கல்
போலி நாகமாணிக்க கல்

நீங்க அந்தக் கல்லை எடுத்துட்டு ஓசானுத்துல இருக்குற ஒரு பழைய கட்டடத்துக்குப் பக்கத்துல வாங்க’ என்று சுப்பிரமணியனிடம் சொன்னோம். அதை நம்பிய சுப்பிரமணியனும், நாகமாணிக்கக்கல்லை எடுத்துட்டு வந்தார். அவர், டப்பாவைத் திறந்து அந்தக் கல்லைக் காட்டினார். உடனே, அந்த கும்பல்ல நாலஞ்சு பேரு சுப்பிரமணியனைக் கம்பால அடிச்சாங்க. அந்தக் கல்லைக் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டினாங்க. நான் அந்தக் கல்லைத் தூக்கிட்டு ஓடிட்டேன். அவர், சத்தம் போட்டதும் மத்தவங்களும் ஓடிட்டாங்க” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கூறிய போலீஸார், ``சுப்பிரமணியன் புகார் கொடுத்தபோதே, செல்போனுக்காகவும் 4,000 ரூபாய் பணத்துக்காகவுமா 9 பேரு, 10 பேரு சேர்ந்து அடிக்கணும், அரிவாளால மிரட்டணும்னு சந்தேகம் வந்துச்சு. அவர் சொன்ன இடத்துல இருக்குற சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைவெச்சு அந்தக் கும்பல்ல ஒருத்தரான பவித்குமாரைப் பிடிச்சோம். பவித்குமார், சுப்பிரமணியனோட உறவுக்காரப் பையன். `நாங்க செல்போன், பணத்தையெல்லாம் பிடுங்கலை. அவரிடமிருந்த நாக மாணிக்கக்கல்லைதான் பிடுங்கினோம்’னு சொன்னார்.

மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

அதுக்குப் பிறகுதான், சுப்பிரமணியன் நாக மாணிக்கக்கல்லை விற்க முயன்றது தெரியவந்தது. ஆனா, அந்த நாக மாணிக்கக்கல் போலியானது. போலியான கல்லுனு தெரிஞ்சா நாமளும் மாட்டிக்குவோம்ணு நினைச்சுதான், புகார் கொடுத்த சுப்பிரமணியனும் தலைமறைவாகிட்டார். சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த மற்றவர்களின் பைக் நம்பர்கள் மூலமாக முகவரிகளை கண்டுபிடிச்சு, அவர்களை தேடிப் போனோம். ஆனா, அவங்க யாருமே வீடுகள்ல இல்லை. பைக்குகளை வீட்டுல விட்டுட்டு தலைமறைவாகிட்டாங்க.

அதுல மூன்று பைக்குகளைப் பறிமுதல் செய்தோம். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓசானூத்துவைச் சேர்ந்த பவித்குமார், பழனிக்குமார், செல்வம், அரவிந்த், தூத்துக்குடியைச் சேர்ந்த பெரியதுரை, சரவணன், பிரகாஷ், புதியம்புத்தூரைச் சேர்ந்த சிவக்குமார், ஆகாஷ், முத்தையாபுரத்தைச் சேர்ந்த சிவா, இம்மானுவேல், வேல்முருகன் ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பவித்குமார் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

கோவில்பட்டி: 23 கொள்ளை வழக்குகளில் தொடர்பு; நகைக் கொள்ளையன் சிக்கியது எப்படி?
பறிமுதல் செய்யப்பட பைக்குகள்
பறிமுதல் செய்யப்பட பைக்குகள்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ``மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களிடம் விலையுயர்ந்த நாக மாணிக்கக்கல், மண்ணுளிப் பாம்பு, கலசம் ஆகியவை இருப்பதாகக் கூறுபவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். இது போன்றவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இது போன்ற மோசடி குறித்து தகவல் சொன்னால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு