Published:Updated:

மலைக்கவைக்கும் மஞ்சள் மாஃபியா!

மஞ்சள் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சள் கடத்தல்

இலங்கைக்குக் கடத்தப்படுவது ஏன்?

மலைக்கவைக்கும் மஞ்சள் மாஃபியா!

இலங்கைக்குக் கடத்தப்படுவது ஏன்?

Published:Updated:
மஞ்சள் கடத்தல்
பிரீமியம் ஸ்டோரி
மஞ்சள் கடத்தல்
கஞ்சா, பீடி இலைகள், கடல் அட்டைகள், நட்சத்திர ஆமைகள், வெடிபொருள்கள்... - பொதுவாகவே கடல் தாண்டிக் கடத்தப்படும் பொருள்களின் பட்டியல் இப்படித்தான் இருக்கும். வெளிநாடுகளுக்கு இவற்றைக் கடத்திச் சென்றால் லட்சக்கணக்கில் பணம் கொட்டும். ஆனால் சமீபகாலமாக, இலங்கைக்கு அதிக அளவில் மஞ்சள் கடத்தப்படும் செய்தி பலரையும் ஆச்சர்யப்படவைத்திருக்கிறது. ‘இதைக்கூட கடத்துவார்களா?’ என்று நம்ப மறுக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இலங்கைக்குக் கடத்தவிருந்த இரண்டு டன் மஞ்சள் சிக்கியது’, ‘கள்ளத்தனமாக மஞ்சள் கடத்த முயன்ற மூவர் கைது’, ‘கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 33,000 கிலோ மஞ்சள்...’ - இவையெல்லாம் சமீபகாலப் பரபரப்புச் செய்திகள். கடந்த இரண்டு மாத காலத்தில் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், 4,200 கிலோ கடத்தல் மஞ்சள் பிடிபட்டிருக்கிறது; எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

‘‘பிடிபட்டது சொற்பம்தான். ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி கடற்கரைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்துவது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

மலைக்கவைக்கும் மஞ்சள் மாஃபியா!

மஞ்சள் கடத்தப்படுவதற்கான காரணம் என்ன?

இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இலங்கையர்களின் பாரம்பர்ய உணவுப்பொருளான மஞ்சள் கட்டித் தூளுக்கான பாரிய தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்ட கடும் விலையேற்றமும் கடத்தல் கும்பல்களின் பார்வையை மஞ்சள் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றன. குருநாகல், கம்பஹா, கண்டி, மாத்தளை, அம்பாறை மாவட்டங்களில் மஞ்சள் பிரதானப் பயிராக இருக்கிறது. கடந்த வருட இறுதியில், ‘உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம்’ என்ற வகையில், வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் இறக்குமதி செய்வதற்கு எங்கட அரசு தடை விதித்தது. இந்நிலையில், ‘கொரோனா வைரஸுக்கு எதிரான பொருளாக’ மஞ்சள் எல்லோராலும் பயன் படுத்தப்பட்டதால், அதற்கான நுகர்வு அதிகரித்ததுடன் தட்டுப்பாடும் உருவானது. இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கக்கூடிய மஞ்சள் உற்பத்தி எங்கட நாட்டில் இல்லை. ஆண்டொன்றுக்கு 8,000 மெட்ரிக் டன் மஞ்சள் தேவை உள்ளது. இங்கட 1,500 மெட்ரிக் டன் மஞ்சள் மாத்திரமே உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதியான மஞ்சள், இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுவந்தது. இறக்குமதிக்குத் தடைவிதித்ததால், மஞ்சளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில், ஒரு கிலோ மஞ்சள் எங்கட பணத்துக்கு 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது (ஒரு இலங்கை ரூபாய் = 0.40 இந்திய ரூபாய்). தற்போது நிலவும் தட்டுப் பாட்டால், ஒரு கிலோ மஞ்சள் 6,000 ரூபாயைத் தாண்டியிருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்தாலும் மஞ்சளைப் பெற முடியாத நிலையே இருப்பதால், இலங்கையில் தற்போது ‘மஞ்சள் மாஃபியா’ உருவாகியியுள்ளது. இந்தக் கும்பல், மஞ்சள் கடத்தலிலும் பதுக்கலிலும் ஈடுபட்டிருக்கிறது.

போலி மஞ்சள்தூள்!

தலைமன்னார், புத்தளம், சிலாபம் கடல்வழி ஊடாக மஞ்சள் கடத்தல் நடைபெறுகிறது. இலங்கைக் கடற்படையும் பொலீஸும் பல ஆயிரம் கிலோ கடத்தல் மஞ்சளை இதுவரை கைப்பற்றியுள்ளன. கொழும்புத் துறைமுகத்தில், துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட 33,000 கிலோ மஞ்சள் சமீபத்தில் பிடிபட்டது. இதேவேளை, மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, கோதுமை மாவில் மஞ்சள் நிறப் பூச்சுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலி மஞ்சள்தூள் எங்கட சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

முன்யோசனையும், ஆய்வுகளுமின்றி மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டதால், எங்கட மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, மஞ்சள் மாஃபியாக்களும் கடத்தல்காரர்களுமே பெரும் நன்மையடைந்திருக்கிறார்கள்’’ என்றார்கள்.

மலைக்கவைக்கும் மஞ்சள் மாஃபியா!

மீண்டும் மீண்டும் கடத்தல்!

அதிகரித்துவரும் மஞ்சள் கடத்தல் குறித்து, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழகப் புலனாய்வுப் பிரிவினரிடம் பேசினோம். ‘‘மஞ்சள், இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பொருள் அல்ல. மஞ்சள் விளையும் பகுதிகளில் கிலோ 90 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதையே வாங்குபவரின் இடத்துக்கே கொண்டுவந்து தருவது என்றால், கிலோ 105 ரூபாய். அதனால், தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குக் கடத்தும்போது நல்ல லாபம் கிடைக்கிறது.

கடற்கரை ஊர்களுக்கு மஞ்சள் ஏற்றி வரும் வாகனங்களை சோதனைச்சாவடிகளில் தடுக்க முடியாது. அப்படியே தடுத்தாலும், ஏதாவது ஒரு மொத்த வியாபாரிக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிவிடுகின்றனர். கடலில் படகுகளில் ஏற்றும்போதோ, கரைகளில் சந்தேகப்படும் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்போதோதான் அவற்றைப் பறிமுதல் செய்ய முடியும். விசாரணை மூலம் மஞ்சளுக்கு உரியவர்கள் பிடிபட்டாலும்கூட, அவர்கள்மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய முடியாது. எனவே, கடத்தலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். இதனால், ஒரு முறை பிடிபடும் கடத்தல் பேர்வழிகள், சில நாள்களிலேயே மீண்டும் மஞ்சள் கடத்தலில் இறங்கிவிடுகிறார்கள்’’ என்று உண்மை நிலவரத்தை விவரித்தார்கள்.

மஞ்சள் இறக்குமதிக்கான தடையை விலக்கி, முறையான அனுமதி தருவதே கடத்தலைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு. உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படாதவாறு அதற்கு இலங்கை அரசு திட்டம் தீட்ட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism