Published:Updated:

`ஊர் பகையாக மாறிய இளநீர்த் திருட்டு...' - தூத்துக்குடி கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி

தூத்துக்குடியில் தென்னந்தோப்பில் இளநீர் திருடியதில், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

`ஊர் பகையாக மாறிய இளநீர்த் திருட்டு...' - தூத்துக்குடி கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்

தூத்துக்குடியில் தென்னந்தோப்பில் இளநீர் திருடியதில், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. 21 வயதாகும் இவர், தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் வழக்கமாக இரவில் நண்பர்களுடன் வாக்கிங் சென்று வருவது வழக்கம். நேற்றிரவு 7 மணிக்கு, வீட்டில் வாக்கிங் சென்றுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாராம். இரவு 9 மணிக்கு மேல் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரைத் தேடிப் பார்த்துள்ளனர்.

பாதுகாப்பில் போலீஸார்
பாதுகாப்பில் போலீஸார்

இந்நிலையில், அதே கிராமத்திலுள்ள ஒளி கோயில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சத்தியமூர்த்தியின் உடல் மட்டும் கிடந்துள்ளது. அவரது தலையைக் காணவில்லை. ஆத்தூர் காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றியதுடன், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடினர். ஆனால், காட்டுப்பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால், தலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

”தலையைக் கண்டுபிடிக்காமல் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லக் கூடாது” எனக் கிராம மக்கள் போலீஸாரை முற்றுகையிட்டதுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் ஆகியோர் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சத்தியமூர்த்தியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு, சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த தலை கைப்பற்றப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

தலைவன்வடலி கிராமத்துக்கு அருகிலுள்ள கீழகீரனூர் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் தன் இரண்டு நண்பர்களுடன் சத்தியமூர்த்தி, இளநீர்களைப் பறித்தபோது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் இந்தக் கொலை நடந்துள்ளதாகச் சொல்லப்டுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்திக்கு 2 அண்ணன், 2 தங்கைகள் இருக்காங்க. அப்பாவும் அம்மாவும் கூலி வேலை பார்த்துதான் குடும்பத்தை நடத்திட்டு வர்றாங்க. சத்தியமூர்த்தி, வாய்த்துடிப்பான பையன். எது கேட்டாலும் சரியாவே பதில் சொல்ல மாட்டான். எல்லாத்துக்கும் எடக்கு மடக்காவே பேசுவான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.காம் முதல் வருஷம் திருச்செந்தூர்ல உள்ள ஒரு காலேஜ்ல படிச்சான். அங்க பாடம் சொல்லித் தர்ற புரொபசரையே வாய்க்கு வந்தபடி பேசியதுல டி.சி-யைக் கொடுத்துட்டாங்க. அவனோட அப்பா, யார் கையில காலில விழுந்தோ ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலத்துல உள்ள காலேஜ்ல ரெண்டாவது வருஷம் சேர்த்துவிட்டாரு. அங்கேயும் பசங்களை செட்டு சேர்த்துக்கிட்டு பிரச்னை பண்ணிருக்கான். அங்க இருந்தும் துரத்திவிட்டுட்டாங்க. இப்போ, மூணாவது வருஷம் தூத்துக்குடியில உள்ள ஒரு காலேஜ்ல படிச்சுட்டு வர்றான்.

உயிரிழந்த சத்திய மூர்த்தி
உயிரிழந்த சத்திய மூர்த்தி

தலைவன்வடலி கிராமத்துக்காரங்களுக்கும், கீழகீரனூர் கிராமத்துக்காரங்களுக்கும் பல வருஷமா பிரச்னை இருந்துட்டு வருது. சின்னப்பசங்க பிரச்னை என்றால்கூட பெரியவங்க வரைக்கும் போயி பெருசாயிடும். இந்த நிலையிலதான், சில மாதங்களுக்கு முன்பு கீழகீரனூர் கிராமத்துல உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள்ள சத்தியமூர்த்தியும் அவனது ரெண்டு நண்பர்களும் நுழைஞ்சு, தென்னமரத்துல ஏறி இளநீர்களைப் பறிச்சிருக்காங்க.

இதைப்பார்த்த தோப்புல வேலை பார்த்த சிலர் மூணு பேரையும் மரத்துல கட்டி வச்சு கடுமையா திட்டி, மரம் ஏறித் திருடியதற்கு மன்னிப்பு கேட்கச் சொன்னதாகச் சொல்றாங்க. மற்ற ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டிருக்காங்க. ஆனா, கடைசி வரையிலயும் சத்தியமூர்த்தி, மன்னிப்பு கேட்க முடியாது எனச் சொன்னதுடன், அந்த ஊர்க்காரங்களை சாதி பெயரைச் சொல்லி அவதூறா பேசியதாகவும் சொல்கிறார்கள். இந்த விஷயம் அந்த ஊருல உள்ள இவன் வயசுப் பயலுகளுக்குத் தெரிஞ்சு, ரெண்டு தரப்புக்கும் மோதல் இருந்து வந்திருக்கு.

போலீஸார் பாதுகாப்பு
போலீஸார் பாதுகாப்பு

இந்த நிலையிலதான் தலை துண்டித்து கொடூரமா கொலை செஞ்சிருக்காங்க. செஞ்சது தப்புன்னு உணராம, மன்னிப்பு கேட்கச் சொன்னதை அவமானமா நினைச்சதுனால வந்த விளைவுதான் இது” என்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், ``கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தி மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்திட்டு வர்றோம். மேலும் நான்கு பேரை தேடிக்கிட்டு இருக்கோம். விசாரணை முடிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்” என்றனர்.

கொலைச் சம்பவத்தால் தலைவன்வடலி கிராமத்தைச் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism