Published:Updated:

`உங்க காதலை வீட்டில் சொல்லிவிடுவோம்!' - காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர், நண்பர் சிக்கினர்

தூத்துக்குடியில் காதல் ஜோடிகளை மிரட்டி, ஐந்தாயிரம் ரூபாய் பணம் பெற்றதுடன், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் உட்பட இருவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைதுசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகுமார்
சசிகுமார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா (வயது 16 பெயர் மாற்றம்). இவரும், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் மேலபுதுக்குடியிலுள்ள அருஞ்சுனைகாத்த அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிட்டுள்ளனர். பின்னர் கோயில் அருகிலுள்ள வனப்பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சிறுமியின் ஊரைச் சேர்ந்த பாலமுருகன், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர் சசிகுமாருக்குத் தகவல் கூறியுள்ளார். உடனே, அங்கு பைக்கில் வந்துள்ளார் காவலர் சசிகுமார்.

மகளிர் காவல் நிலையம்
மகளிர் காவல் நிலையம்

அப்போது காதலர்களிடம் பெயரைக் கேட்டு விசாரித்து, இருவரையும் செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் இருவரது வீட்டிலும் காதல் விவகாரத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவதாகக் கூறி ரூ.5,000 பணத்தைக் கேட்டு மிரட்டியதுடன், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில், காவலர் சசிகுமார் மற்றும் சிறுமியின் ஊரைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

``என்னோட ஊரு ராணிமகாராஜபுரம். எங்க ஊரைச் சேர்ந்த கிருஷ்ணனும் நானும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். மேலப்புதுக்குடியில உள்ள அருஞ்சுனைகாத்த அய்யனார் கோயிலுக்கு சாமி கும்பிட ரெண்டு பேரும் போனோம். சாமி கும்பிட்டு முடிச்சதும், கோயில் பக்கத்துல உட்கார்ந்துப் பேசிக்கிட்டிருந்தோம். பைக்குல போலீஸ் ஒருத்தர் வந்து, ``நீங்க யாரு? எந்த ஊரு? எங்க இருந்து வர்றீங்க?” எனக் கேட்டு அதட்டினார். நாங்களும், பெயர், ஊரைச் சொன்னோம். உடனே, பைக்கை விட்டு கீழே இறங்கி, அவரது செல்போனில் எங்களைப் படம் எடுத்தார்.

மகளிர் காவல் நிலையம்
மகளிர் காவல் நிலையம்

``உங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்லிக் கொடுத்துவிடுவேன். உங்க ஊருல உள்ள பாலமுருகனிடமும் சொல்லிக் கொடுத்திடுவேன். சொல்லாம இருக்கணும்னா ஐயாயிரம் பணம் தாங்க. இல்லேன்னா, ரெண்டு பேரும் இங்க இருந்து நகர முடியாதுன்னு சொல்லி மிரட்டினார். எங்ககிட்ட அவ்வளவு பணம் இல்ல சார்னு சொன்னோம். பணம் தந்தாத்தான் விடுவேன்னு சொல்லி, கிருஷ்ணனைக் கொண்டு வரச் சொல்லி அனுப்பிவிட்டார்.

அதன் பின்னர் என்னை பாலியல் ரீதியா துன்புறுத்தினார். நான் சத்தம் போட்டு அழுதேன். அதுக்குள்ள, கிருஷ்ணன், அவரோட உறவினர் ஒருவருடன் பணத்தோடு என்னைத்தேடி வந்துட்டார். அவர் கேட்டது மாதிரி ஐயாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்துட்டு ரெண்டு பேரையும் தகாத வார்த்தையால திட்டிட்டுக் கிளம்பிட்டார். ஆனா, பாலமுருகனுக்கு நடந்ததை போனில் சொல்லிவிட்டார். ரெண்டு பேரும் வீட்டுக்குப் போயிட்டோம். எங்க ஊருல உள்ள பாலமுருகன் என்பவரும், போலீஸ் மிரட்டிய சம்பவத்தைச் சொல்லி என்னை அவதூறாப் பேசினார்.

மகளிர் காவல் நிலையம்
மகளிர் காவல் நிலையம்

இந்த விஷயம் ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரிஞ்சுப் போச்சு. ரெண்டு பேரு மேலயும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் மனு கொடுத்தேன்” என வாக்குமூலத்தில் கூறியுள்ளார் அச்சிறுமி. காவலர் சசிகுமாரும், சிறுமியின் ஊரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் நண்பர்கள். பாலமுருகன் காதல் ஜோடிகளைப் பின் தொடர்ந்து சென்று, காவலருக்குத் தகவல் கொடுத்த பிறகே, சசிகுமார் அங்கு சென்று காதல் ஜோடிகளை மிரட்டினார் எனவும், காவலர் சசிகுமார் மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, போலீஸ் உட்பட இருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.