தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 23 கடலோர கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து படகுகள் மூலம் கஞ்சா, தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள், கடல் அட்டை, விரலி மஞ்சள், ஏலக்காய், பீடி இலைகள் உள்ளிட்டவை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுவருவது தொடர்கதையாகிவருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தப்படவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், தவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீஸார் தலைமையில் இன்று அதிகாலையில் தாளமுத்து நகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரும், அதைத் தொடந்து ஒரு லாரியும் வந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கார், லாரியை போலீஸார் நிறுத்தினர். ஆனால், காரும் லாரியும் நிற்காமல் வேகமாகச் சென்றன. போலீஸாரும் பின்தொடர்ந்து சென்றனர். கார், லாரி அருகிலுள்ள ஓர் உப்பளத்தில் இறங்கி நின்றன. காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். கார், லாரியை போலீஸார் சோதனையிட்டனர். லாரியில் 12 மூட்டைகளில் 450 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.35 கோடி. லாரியை ஓட்டிவந்த டிரைவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு திருப்பாத்திசேத்தி பகுதியைச் சேர்ந்த ஆண்டிச்செல்வம் என்பது தெரியவந்தது.

பல மாவட்டங்கள் வழியாகக் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள், மதுரையிலிருந்து லாரி மூலம் தூத்துக்குடிக்குக் கடத்திவரப்பட்டதும், இங்கிருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. டிரைவர் ஆண்டிச்செல்வத்தைக் கைதுசெய்ததுடன் கஞ்சா மூட்டைகள், கார், லாரியையும் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.