Election bannerElection banner
Published:Updated:

டி.வி நடிகைக்குப் பாலியல் வன்கொடுமை; ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்! - தொழிலதிபரால் நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( விகடன் )

காதல் என்ற பெயரில் டி.வி நடிகை பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாக எழுந்திருக்கும் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியும், டி.வி நடிகையுமான 27 வயது பெண், ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவர்மீது புகார் அளித்திருக்கிறார்.

இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``அந்தப் பெண் அடிக்கடி படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் நாயுடு என்பவரைச் சந்தித்தார். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டனர். அவர்களின் நட்பு 2018-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது. விஜய் அடிக்கடி மும்பைக்கு வந்து அந்த நடிகையைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்படிச் சந்தித்தபோது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறி அந்தப் பெண்ணுக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்தார்.

நடிகை குற்றம்சாட்டிய விஜய்
நடிகை குற்றம்சாட்டிய விஜய்

அதை அந்தப் பெண்ணும் நம்பியிருக்கிறார். ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு வந்து ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு அங்கு வரும்படி நடிகையிடம் விஜய் கேட்டுக்கொண்டார். அங்கு கட்டாயப்படுத்தி நடிகையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு 2018-ம் ஆண்டு, நவம்பர் 28-ம் தேதி விஜய், மும்பை அந்தேரி மேற்கு பகுதியிலுள்ள நடிகையின் வீட்டுக்குச் சென்றார். அங்கு `எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்?’ என்று நடிகை கேட்டதற்கு, `எனது தங்கைக்கு திருமணம் முடிவானதும் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று போலியாக உறுதியளித்தார். அதை அவரும் நம்பியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார் விஜய். பின்னர், அந்தப் பெண்ணிடம் நடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அடிக்கடி மும்பையின் பல்வேறு ஹோட்டல்களில் அறை எடுத்து விஜய் அந்த நடிகையுடன் ஒன்றாக இருந்திருக்கிறார்.

மும்பை: 73 வயதில் திருமண ஆசை; ரூ.1.3 கோடியை இழந்த முதியவர்! - பணத்தைக்கொண்டு வேறு ஒருவரை மணந்த பெண்

எனினும், அந்தப் பெண் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். இதனால் பல நேரங்களில் பொது இடங்களில் நடிகையை விஜய் அவமானப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் 22-ம் தேதி நடிகை வர்சோவாவில் இருந்தபோது போன் செய்து, தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைச் சந்திக்கச் செல்லவில்லை. இதனால் அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார் விஜய். வேறு வழியில்லாமல் அவரைச் சென்று சந்தித்தார் அந்தப் பெண்.

நவம்பர் 22-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை நடிகையை கோரேகாவ் ஹோட்டலில் வைத்திருந்ததோடு, பாலியல்ரீதியாகக் கடுமையாக கொடுமைப்படுத்தியிருக்கிறார். இந்தக் கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி விஜயிடம் கேட்டார். ஆனால் விஜய், நடிகையை மிரட்டி 15 லட்ச ரூபாய் கொடுக்கவில்லையெனில் தன்னிடம் இருக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதன் பிறகு நடிகை அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

ஆனால் விஜய் விடுவதாக இல்லை. கடந்த ஆண்டு, மார்ச் 29-ம் தேதி நடிகை மத்தியப்பிரதேசத்தில் படப்பிடிப்புக்காகச் சென்றபோது வீடியோ கால் செய்து மனரீதியாகத் துன்புறுத்தினார் . நடிகை மத்தியப் பிரதேசத்திலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மும்பை திரும்பியதும் மீண்டும் பணம் கேட்டுத் துன்புறுத்த ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்தே நடிகை மும்பை டி.என்.நகர் போலீஸ் நிலையத்தில் விஜய்க்கு எதிராகத் தற்போது புகாரளித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் ஹோட்டல்களின் பெயர்களையும் நடிகை குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஹோட்டல்களில் சென்று சோதனை நடத்தி நடந்த சம்பவம் உண்மையா என்பதை உறுதி செய்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் தெரிவித்தனர். விஜய்யை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். காதல் என்ற பெயரில் டி.வி நடிகை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாக எழுந்திருக்கும் புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு