Published:Updated:

சென்னை: முகத்தில் காயம்..?!- சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் போலீஸார் விசாரணை

சித்ரா
சித்ரா

படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நடிகை சித்ரா எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்துவருகிறோம். ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவரின் மகள் நடிகை சித்ரா (29). இவர் விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாகும் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்திலுள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. அதில் நடிப்பதற்காக நடிகை சித்ரா, அதே பகுதியில் பெங்களூரு பைபாஸ் பகுதியிலுள்ள ஹோட்டலில் அறை எண் 113-ல் தங்கியிருந்தார்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

இன்று அதிகாலையில் நடிகை சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஹோட்டலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீஸார் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு நடிகை சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து நசரத்பேட்டை போலீஸார் கூறுகையில், ``நடிகை சித்ரா, 9-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் ஷூட்டிங் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்திருக்கிறார். அப்போது அவரின் வருங்கால கணவரும், தொழிலதிபருமான ஹேமந்த் ரவியுடன் அந்த அறையில் தங்கியிருந்திருக்கிறார். குளிக்கச் செல்கிறேன், அதனால் ஹேமந்த் ரவிவை வெளியில் செல்லும்படி நடிகை சித்ரா கூறிவிட்டு அறைக் கதவைப் பூட்டியிருக்கிறார். அதனால் ஹேமந்த் ரவி, வெளியில் காத்திருந்தார்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

இந்தச் சமயத்தில் நீண்டநேரமாகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர் கணேஷ் என்பவரிடம் தகவல் தெரிவித்தார். மாற்றுச் சாவி மூலம் அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து ஹேமந்த் ரவிஅதிர்ச்சியில் உறைந்தார். பிறகுதான் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடிகை சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் நடிகை சித்ரா தற்கொலை செய்திருக்கிறார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நடிகை சித்ரா எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்துவருகிறோம். ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது. புடவையால் நடிகை சித்ரா தூக்குப் போட்டதால் அவரின் கழுத்தில் காயங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் அவரின் முகத்தில் காயங்கள் இருக்கின்றன. அது, நகக்கீறல்போல இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

நடிகை சித்ரா
நடிகை சித்ரா

அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன என்று விசாரணை நடந்துவருகிறது. நடிகை சித்ரா தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தியிருக்கிறோம். அவரின் செல்போனை ஆய்வு செய்ய முடிவுசெய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் அவரின் இறப்பு குறித்த தகவல் தெரியவரும்" என்றனர்.

நடிகை சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் சில தகவல்களைக் கூறியிருக்கிறார். அதில் சில தினங்களாக நடிகை சித்ரா மன அழுத்ததில் இருந்ததாகக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகை சித்ரா குறித்து அவருக்கு நெருங்கிய சின்னத்திரை நடிகைகள் சிலரிடம் பேசினோம்.``நடிகை சித்ரா, 2013-ம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமனார். பிறகு சில தனியார் டிவி-க்களில் வீடியோ ஜாக்கியாகப் பணியாற்றினார். வி.ஜே சித்து என்ற பெயரில் அறிமுகமானார். அதன் பிறகுதான் `சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்தார். பிறகு `பாண்டியன் ஸ்டோர்ஸி’ல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கலகலப்பாகப் பேசக்கூடியவர். கொரோனா காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திருமணக் கோலத்தில் அவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில் எங்களுக்கு அவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

Vikatan
நடிகை சித்ரா
நடிகை சித்ரா

நடிகை சித்ரா டிக்டாக்கில் ஆக்டிவ்வாக இருந்தார். நிச்சயதார்த்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்திருந்தார். அவரின் சமூக வலைதள பக்கத்தில் தன்னைத் தொகுப்பாளர், டான்ஸர், நடிகை என நடிகை சித்ரா குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி, ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப் பிறகே நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்துவரும் நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு