சேலம் மேட்டூர், மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஒருவர், இன்று காலை வழக்கம் போல் பள்ளி வந்திருக்கிறார். வகுப்பறைக்கு வந்தவர் வெகுநேரமாகத் தனது இருக்கையில் அமர்ந்தபடி அழுதுகொண்டே இருந்திருக்கிறார். சக மாணவிகள் பேசியபோது அவர் எதுவும் பேசாமல் தலையைக் கீழே குனிந்தபடி அழுதுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த மாணவி இருக்கையைவிட்டு வகுப்பறைக்கு வெளியே செல்வதை சக மாணவிகள் பார்த்திருக்கின்றனர். அப்போதுகூட மாணவி முகத்தைக் கழுவுவதற்காகத்தான் வெளியே செல்கிறார் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால் சற்று நேரத்தில் மாடியிலிருந்து விழுந்த சத்தம் கேட்டு சக மாணவிகள் ஓடிவந்து பார்த்திருக்கின்றனர். அப்போது அந்த மாணவி கால் முறிவு ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்திருக்கிறார். பின்னர், ஆசிரியர்கள் ஆம்புலன்ஸுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மாணவி உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து மாணவியைப் பார்வையிட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மாணவி நல்ல நிலையிலிருந்து வருகிறார். பயப்படுவதற்கு அவசியமில்லை. அவருக்கு மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டது குடும்ப பிரச்னையால்தான். தவிரப் பள்ளியோ, ஆசிரியர்களோ காரணமில்லை. மாணவிக்குச் சிகிச்சை முடிந்தவுடன் மன ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.