Published:Updated:

`ஆன்லைன் வகுப்புக்காக மாடிக்குப் போனாங்க..!’ - விபரீத முடிவெடுத்த காட்பாடி இரட்டை சகோதரிகள்

காட்பாடி காவல் நிலையம்
காட்பாடி காவல் நிலையம்

காட்பாடியில், இரட்டைச் சகோதரிகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் மாருதி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், சிவில் இன்ஜினீயர். இவர் மனைவி கௌரி. இந்தத் தம்பதிக்கு பத்மகுமார் என்ற ஒரு மகனும் பத்மபிரியா, ஹரிப்பிரியா என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். பத்மபிரியாவும் ஹரிப்பிரியாவும் இரட்டைச் சகோதரிகள். 17 வயதுடைய இருவருமே காட்பாடியில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் ஒன் முடித்து நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் டு செல்லவிருந்தனர். பத்மகுமார் காட்பாடியில் உள்ள கிங்க்ஸ்டன் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஹரிப்பிரியா
ஹரிப்பிரியா

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஆன்லைன் மூலமாக ப்ளஸ் டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இதற்காக வீட்டு மொட்டை மாடியில் உள்ள அறையை பத்மபிரியாவும் ஹரிப்பிரியாவும் பயன்படுத்தியுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற ஆன்லைன் வகுப்பினை கவனிப்பதற்காகவும் காலை 9.30 மணிக்கே மாடியில் உள்ள அறைக்கு இரண்டு பேரும் சென்றுள்ளனர். மதியம் நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்காக கீழே உள்ள தளத்துக்கு இறங்கி வரவில்லை. மகள்களை அழைத்துவருவதற்காகக் கௌரி மாடிக்குச் சென்றுள்ளார்.

அறையில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்கேமடைந்து ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது, மகள்கள் இருவரும் தூக்கில் சடலமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக காட்பாடி போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்மபிரியா
பத்மபிரியா

மேலும், வழக்குப்பதிந்து இரட்டைச் சகோதரிகளின் மரணத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், இரட்டைச் சகோதரிகளின் தாய் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதிகமான காரம் உப்பு சேர்த்து உணவினை மோசமாகச் செய்வதாகவும் மகள்களிடமும் அடிக்கடி கடிந்துகொள்வதாகவும் சொல்கிறார்கள். எனவே, தாயுடனான தகராறில் சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள்.

எனினும், ஆன்லைன் வகுப்புத் தொடர்பாக பள்ளித் தரப்பிலும் டி.எஸ்.பி துரைபாண்டியன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார். இந்த சம்பவம், காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு