Published:Updated:

கரூர் மாணவி தற்கொலை: `எந்தத் தப்பும் செய்யவில்லை' - கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

சரவணன் நேற்று பள்ளியில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில், திருச்சி, துறையூர் அருகேயுள்ள உறவினர் வீட்டில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.

கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி, பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. போலீஸார் இன்னும் குற்றவாளியைக் கைதுசெய்யவில்லை. இந்த நிலையில், அந்த மாணவி படித்த பள்ளியில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்
`பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

கரூர், சேலம் பைபாஸிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி, கடந்த 19-ம் தேதி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். "பாலியல் தொல்லையால் சாகிற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும். எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக இருக்கிறது. எனக்கு வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன், 'கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியை டி.வி-யில் அடிக்கடி பார்த்ததால், அந்தப் பெண் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டு, மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் செல்போனை ஆராய்ந்ததில், பாலியல் சம்பந்தமான எந்தத் தடயமும் இல்லை. பள்ளிக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று பேட்டி கொடுத்தார். இந்த நிலையில், அந்த மாணவியின் உறவினர்களை, அவர்கள் புகார் கொடுக்க வந்தபோது அவமரியாதையாக நடத்தினார் என்று கண்ணதாசனை முதலில் காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.

சரவணன்
சரவணன்

அதன் பிறகு, அவரை சஸ்பெண்டு செய்தனர். இந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி கீதாஞ்சலி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டும், இதுவரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. இந்தச் சூழலில், அந்தத் தனியார் பள்ளிக்கு எதிராகக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அந்தப் பள்ளி வாகனத்தையும் மறித்து போராட்டம் நடத்தினர். ``இந்த விஷயத்தில் பள்ளித் தரப்பில் தீர விசாரிக்கணும். அங்கேதான் தப்பு நடந்திருக்கு. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கணும்’’ என்று பேட்டி கொடுத்தனர். இந்த நிலையில்தான், அந்த மாணவி படித்த பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிவந்த சரவணன் திடீரென்று நேற்று தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கரூரைச் சேர்ந்த சரவணன் நேற்று பள்ளியில், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டுச் சென்றாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அவர் தனது சொந்த ஊரான குப்புச்சிப்பாளையத்துக்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம், துறையூர் அருகிலுள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள அவரின் உறவினர் வீட்டுக்குச் சென்றாராம். அதன் பிறகு, அந்த வீட்டில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். மாணவி தற்கொலைக்கும் சரவணனுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா அல்லது சொந்தப் பிரச்னைகளுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், சரவணன் எழுதிவைத்ததாக ஒரு கடிதம் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அந்தக் கடிதத்தில், 'என்னை எல்லோரும் தவறாகப் பார்க்கிறார்கள். மாணவியின் தற்கொலைக்கும் எனக்கும் தொடர்பிருப்பதுபோல் பார்க்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. மேலும் நான் பள்ளிக்குச் சென்றபோது, ஒரு மாணவர் என்னை நேரடியாகக் கேட்டான். எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது.

அந்தக் கடிதம்
அந்தக் கடிதம்

அதனால், எனக்கு வாழப் பிடிக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்துகொள்கிறேன். மாணவர்களைக் கோபத்தில் திட்டியிருக்கலாம். எல்லோரும் என்னை மன்னியுங்கள். எல்லோரும் நன்றாகப் படியுங்கள்" என்று எழுதியிருப்பதோடு, மனைவி, குழந்தைகளுக்கு, 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்றும், அவரின் தாயை இரண்டு முறை குறிப்பிட்டு, 'ஐ மிஸ் யூ' என்று எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. மாணவி விவகாரத்தில் தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் தொனியில் இந்தக் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். அடுத்தடுத்து, அந்தப் பள்ளியில் தற்கொலை விவகாரங்கள் தொடரவே, 'பள்ளித் தரப்பில் முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு