Published:Updated:

`அரிவாளால் வெட்டி...காரை மோத வைத்து..!' - கூலிப்படையினரின் நாடகத்தால் அதிர்ந்த நாகை

மு.இராகவன்

'டூவீலரில் சென்ற ராஜகோபால், கார் மோதிய விபத்தில் மரணமடைந்தார்' என்று வழக்குப்பதிவு செய்து, உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதிய திருப்பமாக, ராஜகோபால் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ராஜகோபால்
ராஜகோபால்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மணல்மேடு காவல் சரகத்தைச் சேர்ந்த மணல் வண்டி உரிமையாளர் ராஜகோபால் கார் மோதி விபத்தில் மரணமடைந்தார் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவர் கொலை செய்யப்பட்டார். கொலையை மூடிமறைக்க தொடர்புடைய காவல் நிலையத்தில் பண பேரம் நடந்துகொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இறந்து கிடக்கும் ராஜகோபால்
இறந்து கிடக்கும் ராஜகோபால்

இந்நிலையில், ராஜகோபாலை கொலைசெய்த கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "அமீர் ஹைதர்கான் என்பவர், இளந்தோப்பு விவசாய கூட்டுறவு வங்கியில் செயலராகப் பணிபுரிந்து, கையாடல் வழக்கில் சிக்கியிருப்பவர்.

கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள அமீர் ஹைதர்கான், குடும்பப் பிரச்னை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி மர்மமான முறையில் தூக்கு மாட்டி இறந்துபோனார். அமீர் ஹைதர்கானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மகனும் சில மாதங்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அமீர் ஹைதர்கானுக்கு ராஜகோபால் மனைவி ஷீலாவுடன் தொடர்பு ஏற்பட்டது. ராஜகோபாலுடன் சேர்ந்து வாங்கிய சொத்து தொடர்பாக ஹைதர்கானுக்கும் ராஜகோபாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஷீலாவும் விலக ஆரம்பித்தார். எனவே, ராஜகோபாலைக் கொன்று ஷீலாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் அமீர் ஹைதர்கான்.

மரத்தில் மோதிய கார்
மரத்தில் மோதிய கார்
prasanna venkatesh

பட்டவர்த்தியைச் சேர்ந்த கர்ணன் என்பவரிடம் ராஜகோபாலை கொலை செய்யும்படி கூறியுள்ளார். கர்ணனின் பிளான்படி, கூலிப்படையைச் சேர்ந்த அருள்மொழி, சத்யராஜ், ராஜேஷ், சிவசிதம்பரம் ஆகியோர் டூவீலரில் வந்த ராஜகோபாலை வழிமறித்து, காரைவிட்டு மோதியுள்ளனர். இதில், கீழே விழுந்த ராஜகோபாலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கார் மரத்தில் மோதியதுபோல் செட்டப் செய்து முடித்துவிட்டனர். ஆரம்பத்தில், விபத்து என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின், தற்போது கொலை வழக்காக மாற்றி இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதி நால்வரையும் தேடிவருகிறோம் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.