சென்னை பெரம்பூர், மதுரைசாமி மடம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவரின் மனைவி துர்காதேவி (52). இவர் கடந்த 25.3.2014-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக் (24), ஓட்டேரியைச் சேர்ந்த கிருஷ்ணாயில் கார்த்தி (23) இருவரும் துர்காதேவியைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுச் சென்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து திரு.வி.க நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கார்த்திக், கிருஷ்ணாயில் கார்த்தி இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுள வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாகச் சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும்வந்தனர். இந்த வழக்கில் 3.3.2022-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் எதிரிகள் இருவர்மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கார்த்திக், கிருஷ்ணாயில் கார்த்தி ஆகியோருக்கு 302 சட்ட பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் 380 சட்டப்பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் சிறையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பாகப் புலனாய்வு செய்து, எதிரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திரு.வி.க.நகர் காவல் குழுவினரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.