Published:Updated:

தேனி: ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல், இருவர் கைது! - கோவையிலிருந்து கொண்டுவரப்பட்டதா?

இருவர் கைது
இருவர் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில்விட்ட இரண்டு பேரைக் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில்விடப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆனைமலையான்பட்டி அருகே வெள்ளகரடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவரிடம் ரூ.2,000 ரூ.500 கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் கள்ளநோட்டு வைத்திருந்த நபர் கம்பம் பகுதியில் வசித்துவரும் கண்ணன் (35) என்பது தெரிந்தது. மேலும் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (42) என்பவர் புழக்கத்தில் விடுவதற்காக, கள்ளநோட்டுகளை கண்ணனிடம் கொடுத்து அனுப்பியதும் தெரிந்தது. இதையடுத்து அலெக்சாண்டரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், ரூ.20,02,450 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ராயப்பன்பட்டி
ராயப்பன்பட்டி

அலெக்சாண்டர் வீட்டில் சோதனையிட்ட ராயப்பன்பட்டி போலீஸார், சாக்குமூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்த ரூ.20,02,450 மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் பறிமுதல் செய்து கண்ணன், அலெக்சாண்டர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

காதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக - கேரள எல்லையான கம்பம் மெட்டுப் பகுதியில் கேரள போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலுடன் இந்த இருவருக்கும் தொடர்பு இருக்கிறதா என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷிடம் கேள்வி எழுப்பினோம்.

தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்
தேனி எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்

அவர், ``கடந்த ஜனவரியில் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விட்டது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட முருகேசன் என்பருக்கும், அலெக்சாண்டருக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் கண்ணன், அலெக்சாண்டர் வீடுகளில் முழுமையாகச் சோதனை செய்தனர். இருவர் வீடுகளிலும் கள்ளநோட்டு தயாரிப்பதற்கான மெஷின்கள் எதுவும் இல்லை. இந்த நோட்டுகள் கோவையிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்காலம் எனச் சந்தேகிக்கிறோம். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு