Published:Updated:

கடலூர்: நீதிமன்றத்தில் பணி... அதிரவைத்த போலி நியமன ஆணை! - சிக்கிய பட்டதாரிகள்


சத்யராஜ், செந்தில்குமார்
சத்யராஜ், செந்தில்குமார்

கடலூரில் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்கான போலி நியமன ஆணை வழங்கி  ரூபாய் 6.17 லட்சம் ஏமாற்றிய பட்டதாரிகளை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள பெரிய சோழவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திய தாஸ் (26 ). பெயின்ட்டராப் பணியாற்றிவருகிறார். கடலூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபினவ்-விடம் இவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: ``நான் பெயின்ட்டராகப் பணியாற்றிவருகிறேன்.

கைது
கைது
representational image

எனக்கு கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சத்யராஜ் (30 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு நீதிபதிகள் மத்தியில் நல்ல நட்பு இருப்பதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகக் கூறி அதில் வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்தார். இதற்காக ரூபாய் 6.17 லட்சம் பெற்றுக்கொண்டார். பின்னர் நீதிமன்றப் பணிக்கான பணி நியமன ஆணை வழங்கினார் .

ஆனால், உடனே ஊட்டி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அங்கு செல்ல வேண்டும் எனவும் கூறி அழைத்துச் சென்றார். ஆனால், ஊட்டியில் விடுதியில் சில நாள்கள் தங்கவைத்துவிட்டு, சிதம்பரத்துக்கு மீண்டும் பணிமாற்றம் செய்ததற்கான ஆணை பெற்றிருக்கிறேன் எனத் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த நிலையில் விசாரித்தபோது சத்யராஜ் ஏமாற்றுவது தெரியவந்தது.

எனவே, போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்யராஜ் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க எஸ்.பி அபினவ் உத்தரவிட்டார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி கனகேசன், இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டதில் சத்யராஜ் ஏமாற்றியது தெரியவந்தது.


சத்யராஜ், செந்தில்குமார்
சத்யராஜ், செந்தில்குமார்

தீவிர விசாரணையில் சத்யராஜ் எம்.பி.ஏ பட்டதாரி என்பதும், அவருடைய நண்பர் கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.பில் பட்டதாரி செந்தில்குமாருடன் சேர்ந்து போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவரும் நிலையில், அங்கு போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பட்டதாரிகள் சத்யராஜ் மற்றும் அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோரை வழக்கு பதிவு செய்து கைதுசெய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது போன்று வேறு யாரையேம் ஏமாற்றியிருக்கிறார்களா, இவர்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு