Published:Updated:

ஆசிரமத்தில் ரெய்டு... 2 பெண் உதவியாளர்கள் கைது! - நித்தியானந்தா விவகாரத்தில் வேகம்காட்டும் போலீஸ்

`எங்கள் மகள்களைக் கடத்தி அவர்கள் சட்டவிரோதமாக இரண்டு வாரங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.'

நித்தியானந்தா
நித்தியானந்தா

கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தின் கிளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டுவருகிறது. நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்திலிருந்து மகளை மீட்டுத் தரக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த மனுவில், ``பெங்களூருவை அடுத்த பிடதி ஆசிரமம் நடத்திவந்த கல்விநிலையத்தில் 2013-ல் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட எங்களுடைய 4 மகள்களைச் சேர்த்தோம். அதன் பின்னர், அவர்கள் அகமதாபாத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதை அறிந்தோம்.

Nithyananda
Nithyananda

அகமதாபாத்தின் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அந்த ஆசிரமம் இயங்கிவருகிறது. இதையடுத்து, அங்கு சென்று எங்கள் மகள்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரின் உதவியோடு ஆசிரமத்துக்குள் சென்று எங்கள் இரு மகள்களை மீட்டோம். அவர்கள் இருவரும் மைனர்.

ஆனால், எங்களின் மற்ற மகள்களான லோபாமுத்ரா ஜனார்த்தன ஷர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோரை எங்களால் சந்திக்க முடியவில்லை. எங்கள் மகள்களைக் கடத்தி அவர்கள் சட்டவிரோதமாக இரண்டு வாரங்களுக்கு மேலாக அடைத்து வைத்திருக்கிறார்கள்'' என்று அந்தக் கர்நாடக தம்பதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

ஜனார்த்தன ஷர்மாவின் புகாரை அடுத்து நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே, நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளை போலீஸார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். அகமதாபாத் ஆசிரமத்தில் அதிரடியாக ரெய்டு நடத்திய போலீஸ் அதிகாரிகள் அதற்குப் பின்பே இரண்டு பெண் நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர். கைது குறித்து பேசிய அகமதாபாத் டிஎஸ்பி கமாரியா, ``இரண்டு பெண்களும் ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டதும் துன்புறுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் காவலில் உள்ளனர். நாங்கள் எங்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.