சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜர் சாலையில் சென்னை மாநிலக் கல்லூரி அமைந்திருக்கிறது. 1840-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியானது, சென்னை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக தொடங்கப்பட்ட மிகப் பழமையான கல்லூரியாகும். இந்தக் கல்லூரியில் பணியாற்றிவரும் இரண்டு உதவிப் பேராசிரியர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாகக் கூறி, அவர்களைத் தமிழ்நாடு உயர்கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்திருக்கிறது.
சமீபத்தில் ஆவண சரிபார்ப்பு பணி நடைபெற்றிருக்கிறது. அப்போது, கடந்த 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் காமாட்சி, 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர் சேதுலகா ஆகியோர் பணியில் சேரும்போது சமர்ப்பித்த ஆவணங்கள் போலி என்பது கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதையடுத்து, போலியான ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த இருவரையும் உயர்கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. மேலும், போலியான ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்த இரண்டு உதவிப் பேராசிரியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உயர்க் கல்வித்துறை பரிந்துரைசெய்திருக்கிறது.

இந்த தவறு எப்படி நடந்தது என்பது தொடர்பாகவும், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. வடமாநிலத்தவர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.