Published:Updated:

`ஒரேயொரு கேஸ் பில்தான்; ரூ. 4 லட்சத்தை ஏமாற்றினோம்!' - சென்னையில் கைதான வேலையில்லாத பட்டதாரிகள்

பட்டதாரி விஜயகுமார்
பட்டதாரி விஜயகுமார்

ஒரேயொரு கேஸ் பில்லை வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர்களிடமிருந்து ரூ.3.82 லட்சத்தை ஏமாற்றினோம். அந்தப் பணத்தில் வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தபோது சிக்கிக்கொண்டோம் என வேலையில்லாத பட்டதாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயல், சோழன்நகரைச் சேர்ந்தவர் கௌதம் (26). இவர் போரூர் காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் வேலைபார்க்கும் தனியார் நிதி நிறுவனம் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் `அடகு வைத்த தங்க நகைகளை மார்க்கெட் விலைக்கு விற்று கடனை அடைத்து மீதி தொகையை உங்களிடம் கொடுக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த விளம்பரத்தில் செல்போன் நம்பர்களும் இருந்தன.

ஜெகன்
ஜெகன்

அந்த செல்போன் நம்பருக்கு பேசிய ஒருவர், தன்னுடைய பெயர் விஜயகுமார் என்றும் அம்பத்தூரில் குடியிருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர், ``நான் சென்னை கொரட்டூர் பகுதியில் 20 சவரன் தங்க நகைகளை அடகு வைத்து 3.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். தற்போது வட்டியோடு 3.82 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியதுள்ளது. என்னால் வட்டியும் அசல் தொகையும் செலுத்த முடியவில்லை. அதனால் நகைகளை விற்று மீதி தொகையை என்னிடம் கொடுங்கள்" என்று கூறியுள்ளார். அதை நம்பிய நிதிநிறுவன ஊழியர்கள், ``அடகு வைத்தற்கான ரசீது இருந்தால் அதை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து 3.82 லட்சம் ரூபாய்க்கான ரசீதை விஜயகுமார், வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதைப்பார்த்த நிதி நிறுவன ஊழியர்கள், ``நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தோடு கொரட்டூர் ரயில் நிலையத்துக்கு வருகிறோம். நீங்கள் அங்கு காத்திருங்கள்" என்று கூறினர். கடந்த 14 -ம் தேதி பிற்பகலில் நிதி நிறுவன மேலாளர் கௌதம், உதவி மேலாளர் கண்ணன் ஆகியோர் கொரட்டூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் விஜயகுமாரிடம் போனில் பேசினர்.

விஜயகுமார்
விஜயகுமார்

இதையடுத்து மூன்று பேரும் அடகு வைத்த நகைகளை மீட்கச் சென்றனர். கொரட்டூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாகக் கௌதம் மற்றும் கண்ணனை விஜயகுமார் அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த அடகுக் கடையைக் காட்டிய விஜயகுமார், இங்குதான் நகைகளை அடகு வைத்துள்ளேன். மதியம் நேரம் என்பதால் அடகுக் கடையின் உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றுவிட்டார். அவரின் வீடு எனக்குத் தெரியும். அங்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று விஜயகுமார் கூறியுள்ளார். அதற்கு நிதிநிறுவன மேலாளர் கௌதமும் கண்ணனும் சம்மதித்துள்ளனர்.

விஜயகுமார் கூறிய இடத்துக்கு அவர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு வீட்டைக் காண்பித்த விஜயகுமார், பணத்தை என்னிடம் கொடுங்கள். அதைக் கொடுத்து நகைகளை வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பிய நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய விஜயகுமார், அடுத்த தெருவில் தயாராக காத்திருந்த அவரின் நண்பன் ஜெகனின் பைக்கில் ஏறி எஸ்கேப் ஆகிவிட்டார். நீண்ட நேரமாக விஜயகுமார் திரும்பி வராததால் அந்த வீட்டில் நிதி நிறுவன ஊழியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இங்கு யாரும் அடகுக் கடை நடத்தவில்லை என்று கூறினர். அதைக் கேட்ட நிதி நிறுவன ஊழியர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

நகைகளை அடகு வைத்ததற்கான ரசீதை விஜயகுமார், நிதி நிறுவனத்துக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதைப் பார்த்த நிதி நிறுவன ஊழியர்கள், நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தோடு கொரட்டூர் ரயில் நிலையத்துக்கு வருகிறோம். நீங்கள் அங்கு காத்திருங்கள் என்று கூறினர்.

இதையடுத்து கொரட்டூர் காவல் நிலையத்தில் கௌதம் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவில் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தலைமைக் காவலர்கள் சீதாராமன், ராஜேந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற விஜயகுமார், பைக்கில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

அந்தக் காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். பைக்கின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்தபோது அது, விஜயகுமாரின் பைக் எனத் தெரியவந்தது. பைக்கின் நம்பர் மற்றும் விஜயகுமாரின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொண்டு போலீஸார் அவரைப் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அமைந்தகரையைச் சேர்ந்த ஜெகனை (21) போலீஸார் பிடித்தனர். பின்னர் இருவரிடமும் விசாரித்தபோது, நிதிநிறுவனத்தைத் திட்டம் போட்டு ஏமாற்றி பணத்தைப் பறித்தது தெரியவந்தது.

பணம்
பணம்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``விஜயகுமாரின் அப்பா, பிரபலமான வங்கி ஒன்றில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். பட்டதாரியான விஜயகுமார், வேலை தேடிக்கொண்டிருக்கிறார். வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். அதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய நண்பன் ஜெகனிடம் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது குறித்து விஜயகுமார் ஆலோசித்துள்ளார்.

அப்போதுதான் இருவரும் நிதிநிறுவன விளம்பரம் குறித்து ஆலோசித்துள்ளனர். உடனே இந்த விளம்பரத்தின் மூலமே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என விஜயகுமார் கூறியுள்ளார். பின்னர், அந்த விளம்பரத்தில் உள்ள நம்பருக்கு விஜயகுமார் போன் செய்து 20 சவரன் தங்க நகையை அடகு வைத்திருக்கும் தகவலைக் கூறியுள்ளார். அதை நிதிநிறுவன மேலாளர் கெளதமும் கண்ணனும் நம்பியுள்ளனர். அப்போதுதான் அடகு வைத்த ரசீதை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பும்படி கூறியதும் விஜயகுமார் என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.

Vikatan

பின்னர், கேஸ் பில்லை போட்டோ எடுத்த விஜயகுமார், அதை அடகுக்கடை பில்லாக மாற்றியுள்ளார். வட்டி, அசல் தொகை என 3.82 லட்சம் ரூபாய் என ரசீதில் குறிப்பிட்டு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்த நிதிநிறுவன ஊழியர்கள், உண்மையான பில் என நம்பியுள்ளனர். அதன் பிறகு, பணத்தோடு நிதிநிறுவன ஊழியர்கள் வந்த சமயத்தில் நண்பன் ஜெகனுடன் பைக்கில் விஜயகுமார் தப்பியுள்ளார். அவர்கள் இருவரையும் கைது செய்து 3,20,000 ரூபாயை மீட்டுள்ளோம்" என்றார்.

விஜயகுமாரும் ஜெகனும் போலீஸாரிடம், ``நாங்கள் இருவரும் வேலைதேடி பல இடங்களுக்குச் சென்றோம். ஆனால், வேலை கிடைக்கவில்லை. அதனால்தான் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டோம். அதற்கும் பணம் கிடைக்கவில்லை. இதனால்தான் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்ததாகக் கூறி ஏமாற்றி பணத்தை பறித்தோம். அந்தப் பணத்தைக் கொண்டு திருப்பதிக்குச் சென்றோம். ஜாலியாக செலவழித்தோம். ஆனால், 4 நாள்களுக்குள் போலீஸிடம் சிக்கிக்கொண்டோம்" என்று கூறியுள்ளனர்.

நிதி நிறுவன ஊழியர்களை நூதன முறையில் ஏமாற்றிய விஜயகுமாரும் ஜெகனும் போலீஸாரிடம் சிக்கியதும், எங்களை மன்னித்து விட்டுவிடுங்கள். பணத்தைதான் திரும்ப கொடுத்துவிட்டோமே, பிறகு ஏன் ஜெயிலுக்கு அனுப்புகிறீர்கள் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளனர். அதற்கு போலீஸார், இப்போது சிறைக்குச் செல்லுங்கள், திருந்தி வெளியில் வாருங்கள் என்று பதிலளித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு