Election bannerElection banner
Published:Updated:

உத்தரப்பிரதேசம்: கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகள் படுகொலை! - உன்னாவ் கொடூரம்

மருத்துவமனை
மருத்துவமனை ( ANI )

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மூன்று சிறுமிகள் வயலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள உன்னாவ் மாவட்டதில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பாபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், தங்களின் கால்நடைகளுக்குத் தீவனம் எடுப்பதற்காக அருகிலுள்ள வயலுக்குச் சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினரும், கிராம மக்களும் சிறுமிகளைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

குற்றம்
குற்றம்
representational image

நீண்டநேரத் தேடலுக்குப் பிறகு, அந்த மூன்று சிறுமிகளும் அருகிலிருந்த வயல்வெளியில், அவர்களின் ஆடைகளால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் இரண்டு சிறுமிகள் ஏற்கெனவே இறந்தது தெரியவந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்ட மற்றொரு சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி ஆனந்த் குல்கர்னி, ``இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் உன்னாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. சிறுமிகளின் வாயில் வெள்ளை நுரை இருந்ததால், விஷம்வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மருத்துவ ஆய்வில் தெரிகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனந்த் குல்கர்னி
ஆனந்த் குல்கர்னி
ANI

சிறுமிகள் மூவரும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தனர் என்கின்றனர் குடும்பத்தினர் . ஆனால், போலீஸ் தரப்பு அதை மறுத்திருக்கிறது. “நாங்கள் சம்பவ இடத்துக்குச் செல்லும் முன்னரே உடல்கள் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், கை கட்டப்பட்டிருந்ததா என்று உறுதிப்படுத்த முடியவில்லை” என்றனர்.

மற்றொருபுறம், தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறாது. ஆனால், கைகள் கட்டப்பட்ட நிலையில், எப்படி அவர்களால் விஷம் குடித்திருக்க முடியும் என்று சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ``எங்களுக்கு யாருடனும் முன்பகை கிடையாது. இதை யார் செய்திருக்கக்கூடும் என்று எங்களால் யூகிக்கவும் முடியவில்லை" என்று சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. காவல்துறையினர் இறந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பில் அவப்பெயர் பெற்ற உன்னாவில், மீண்டுமொரு சம்பவம் நடந்திருப்பது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு