Published:Updated:

பட்டுக்கோட்டை:`படித்தது ப்ளஸ் டூ, 15 வருடங்களாக டாக்டர்; ரூ.1 கோடி பறிமுதல்’-ஒரே நாளில் இருவர் கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கைதுசெய்யப்பட்ட போலி டாக்டர் அறிவழகன்
கைதுசெய்யப்பட்ட போலி டாக்டர் அறிவழகன்

மருத்துவமனையில் சோதனை செய்ததில் இரண்டு டிராவல் பேக், மாத்திரைகள் இருந்த ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாத்திரைகளுக்கு நடுவில் பணக்கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பட்டுக்கோட்டை அருகே ப்ளஸ் டூ மட்டுமே படித்துவிட்டு டாக்டர் எனக் கூறி சிகிச்சை கொடுத்துவந்த ஒருவர், சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை கொடுத்துவந்த மற்றொருவர் என இரண்டு போலி டாக்டர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒரு டாக்டரின் கிளினிக்கில் அட்டைப்பெட்டியில் மாத்திரைகளுக்கு நடுவில் 1.14 கோடி ரூபாய் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்தப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலி டாக்டர் - மருத்துவமனை
போலி டாக்டர் - மருத்துவமனை

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பெரமையன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (52). சித்த பிரிவு மருத்துவராக இருக்கிறார். இவர் மதுக்கூர் பஸ் ஸ்டாண்டில் `சொர்ணமுல்லை மருத்துமனை’ என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்திவருகிறார். சித்த மருத்துவம் படித்திருக்கும் அறிவழகன் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை கொடுத்துவருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள், போலீஸார் அறிவழகனின் மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவரின் கல்விச் சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்தனர்.

இதில் அறிவழகன் முறையாக சித்த மருத்துவம் படித்திருப்பது தெரியவந்தது. ஆனால், அவர் ஆங்கில மருத்துவ முறையில் அனைவருக்கும் சிகிச்சை கொடுத்துவந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது கிளினிக்கில் ஆங்கில மருந்துகளுக்கான மெடிக்கல் ஷாப், எக்ஸ்-ரே, இசிஜி உள்ளிட்ட கருவிகள் ஒன்பது படுக்கை வசதிகளோடு இருந்ததும் தெரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து மருத்துவமனையை சோதனை செய்ததில் இரண்டு டிராவல் பேக், மாத்திரைகள் இருந்த ஒரு அட்டைப்பெட்டிக்குள் மாத்திரைகளுக்கு நடுவில் பணக்கட்டுகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர் அதிகாரிகள். பின்னர் அதில் மொத்தம் ரூ.1.14 கோடி இருந்ததும் தெரியவந்தது. பின்னர் பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அறிவழகன் மருத்துவமனை
அறிவழகன் மருத்துவமனை

பின்னர் இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புதிய இடம் வாங்குவதற்காக வைத்திருந்த பணம் என அறிவழகன் தெரிவித்தார். கிளினிக்கில் இருந்த பணத்துக்கு முறையாக கணக்கு வைத்திருக்கிறாரா என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவழகனிடம் துருவித் துருவி விசாரித்தனர். அப்போது அவர் முறையாக பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து டாக்டர் அறிவழகனை போலீஸார் கைதுசெய்தனர்.

`சிறை சென்றும் திருந்தவில்லை!’ - மக்களின் உயிரோடு விளையாடிய போலி பெண் மருத்துவர்

இதேபோல் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மாதவன் (50) என்பவர் மருத்துவமனை நடத்திவருகிறார். அவருடைய கிளினிக்கிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த மாதவன், கடந்த 15 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை வருடங்களாக மக்களை ஏமாற்றி சிகிச்சை கொடுத்துவந்திருக்கிறாரே என அதிகாரிகள் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவரும் கைதுசெய்யப்பட்டார். ஒரே நாளில் இரண்டு போலி டாக்டர்கள் கைதுசெய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு