Published:Updated:

`டூ வீலரில் பின்தொடர்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!’ - ராமநாதபுரத்தில் போலீஸில் சிக்கிய இருவர்

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( மாதிரி புகைப்படம் )

நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் தனுஷ்கோடி சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டூ வீலரில் சென்ற இளம்பெண்ணை வழி மறித்து பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள யூடியூப் சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ராமேஸ்வரம் வந்திருந்த இவர், நேற்று காலை தன் தம்பியுடன் புதுரோட்டிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டூவீலரில் வந்துள்ளார். தனுஷ்கோடி சாலையில் வந்துகொண்டிருந்த இவரை பின் தொடர்ந்து வந்த இருவர் வழிமறித்துள்ளனர்.

ஆனால், அந்த இளம்பெண் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த அந்த ஆசாமிகள் அப்பெண்ணை டூ வீலரில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் நிலை குலைந்து சாலையில் விழுந்த பெண்ணின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பெண்ணின் தம்பிக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சாலையில் விழுந்து கிடந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவும் அவர்கள் முயன்றதாகத் தெரிகிறது.

பாலியல்  தொல்லையில் ஈடுபட்ட விஜயகுமார்
பாலியல் தொல்லையில் ஈடுபட்ட விஜயகுமார்
உ.பாண்டி

இதனால் அப்பெண் கூச்சலிட்டார். பயந்துபோன அந்த இருவரும் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து ராமேஸ்வரம் துறைமுகக் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அப்பெண்ணையும் அவரின் தம்பியையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பரமாத்மா
பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பரமாத்மா
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து நடந்த விசாரணையில் அவர்கள் இருவரும் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், பரமாத்மா எனத் தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்த துறைமுகம் போலீஸார் அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் தனுஷ்கோடி சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு