Published:Updated:

ஆசை வார்த்தை... வீடியோ... மிரட்டல்..!- சேலத்தை பதறவைத்த பட்டதாரி, ஆட்டோக்காரர்

கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் புகார் பெற்று அபிஷேக்கை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தைப்போல சேலம் மாவட்டத்திலும் பெண்களிடம் காதலிப்பதுபோல பழகி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பதும், மறுக்கும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிடும் கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரி அபிஷேக்
சபரி அபிஷேக்

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த சபரி அபிஷேக் என்ற பட்டதாரி இளைஞர் கல்லூரி மாணவிகளிடம் காதலிப்பது போலப் பழகி, பிறகு அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோக்கள் எடுத்து மிரட்டி வந்துள்ளார். அதேபோல சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்கிற ஆட்டோ டிரைவர் கல்லூரிப் பெண்கள் உட்பட பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேட்டூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சபரி அபிஷேக். இவர் கடந்த வாரம் சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு வந்து கல்லூரி மாணவி ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கல்லூரி மாணவியைப் பின்தொடர்ந்து வந்த பெற்றோர் சபரி அபிஷேக்கைப் பிடித்து மிரட்டிக்கொண்டிருந்தார்கள். இதை நோட்டமிட்ட அப்பகுதியில் பணியாற்றிய காவலர் ஒருவர் அங்கு வந்து விசாரித்தார். அந்தக் கல்லூரி மாணவி காவலரைத் தனியாக அழைத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி அழுதிருக்கிறார்.

பாலியல் மிரட்டல்
பாலியல் மிரட்டல்
எம். விஜயகுமார்

இதையடுத்து, சபரி அபிஷேக்கின் செல்போனை வாங்கிப் பார்த்ததில் அதில் பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து அபிஷேக்கை சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ``நான் ஜிம்முக்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருப்பேன். அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் வீழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களிடம் பேச்சுக் கொடுத்து செல்போன் நம்பரை வாங்கிக் கொள்வேன். இரவு நேரத்தில் அவர்களின் மனதைக் கவரும் அளவுக்குப் பேசுவேன்.

பிறகு லீவு நாள்களில் வரச் சொல்லி நட்சத்திர விடுதிக்கோ, வெளியூர்களுக்கோ கூட்டிச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி ஆசை வார்த்தைகளை உதிர்த்து பாலியல் வன்கொடுமை செய்வேன். அதை வீடியோ எடுத்துக்கொள்வேன். அந்த வீடியோவை அவர்களிடம் காட்டி பணம் கேட்பேன்'' என்று சபரி அபிஷேக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, கல்லூரி மாணவியின் பெற்றோரிடம் புகார் பெற்று அபிஷேக்கை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Vikatan

மகுடஞ்சாவடியை அடுத்த செல்லியம்மன்பாளையம் மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ். இவர் அப்பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத் தலைவராக இருந்து வருகிறார். தற்போது இவர் காகாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஆட்டோ ஓட்டிவருகிறார். மோகன்ராஜ், இரண்டு பேரை காதல் திருமணம் செய்துள்ளார். மோகன்ராஜின் தொல்லை தாங்க முடியாமல் சில மாதங்களிலேயே இரண்டுபேரும் பிரிந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில், ஓரிரு நாள்களாக மோகன்ராஜ் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போலப் பரவியது. இதையடுத்து, காவல்துறை ட்ராக் செய்து பார்த்ததில் காகாபாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண் சில மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜ் ஆட்டோவில் ஏறி இருக்கிறார். அவரிடம் மோகன்ராஜ் நைசாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து தன் நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். இதையடுத்தே அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது தெரியவந்தது.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்
எம். விஜயகுமார்

காவல்துறையினர் மோகன்ராஜின் செல்போனை வாங்கிப் பார்த்ததில் அதில் 7 பெண்களின் வீடியோக்கள் இருந்ததையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோகன்ராஜ் கொடுத்த வாக்குமூலத்தில், `கோவை, ஈரோடு, பவானி மற்றும் சேலத்திலிருந்து நள்ளிரவில் வருபவர்களுக்கு காகாபாளையத்திலிருந்து இளம்பிள்ளை செல்வதற்குப் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பலர் ஆட்டோக்களில் வருவார்கள். எனக்குப் பிடித்த பெண்களிடம் நைசாக பேச்சு கொடுப்பேன். என் பேச்சுக்கு மயங்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன். மறுக்கும் பெண்களை மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்வேன்'' என்று கூறியுள்ளார். இதையடுத்து, சேலம் காவல்துறையினர் மோகன்ராஜை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

92 வீடியோக்கள்... 40 பெண்கள்... சிக்கும் அரசியல்வாதிகள்..!- ம.பி.யை பதறவைக்கும் பாலியல் வழக்கு

இதுபற்றி சேலம் மாவட்ட எஸ்.பி தீபா கனிக்கரிடம் கேட்டதற்கு, ``மகுடஞ்சாவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வந்த உடனே விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஆனால், யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. அவனுடைய செல்போனில் ஒரு வீடியோதான் இருந்தது. 7 வீடியோக்கள் இருப்பதாகச் சொல்வது தவறானது. மேட்டூர் சபரி அபிஷேக் வழக்கை சேலம் மாநகர காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். எனக்கு அதைப் பற்றி பெரிதாகத் தெரியவில்லை'' என்றார்.

சேலம் மாநகர காவல்துறையினரிடம் விசாரித்ததில், ``மேட்டூரைச் சேர்ந்த சபரி அபிஷேக்கின் செல்போனை வாங்கிப் பார்த்ததில் அதில் 6 பெண்களிடம் அவன் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் இருந்தன. அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடம் புகார் பெற்று அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றார்கள்.

சேலம் மாவட்ட எஸ்,பி தீபா கனிகர்
சேலம் மாவட்ட எஸ்,பி தீபா கனிகர்
எம். விஜயகுமார்

இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் பாவேந்தன், "முதலாவதாக இச்சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். 6 மாததிற்கு முன்பு காகாபாளையம் பகுதியில் வி.சி ஆட்டோ தொழிற்சங்கத்தை கட்டமைப்பதாக மோகன்ராஜ், வாசுதேவன் எங்களை அணுகினார்கள். நாங்களும் அனுமதி அளித்தோம். பிறகு இவர்கள் மீது தவறான பல குற்றச்சாட்டுகள் வந்தது. அதாவது ஆட்டோவில் ஏறும் பயணிகளை மிரட்டுவதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த அமைப்பையே கலைத்துவிட்டோம். அதற்காக காகாபாளையம் இன்ஸ்பெக்டருக்கும், மகுடஞ்சாவடி ஆர்.டி.ஓ.விற்கும் நாங்கள் கைப்பட எழுதி இருக்கும் கடிதம் தான் ஆதாரம். அதனால் அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை"' என்றார்.