Published:Updated:

குமரி: நள்ளிரவில் பாழடைந்த வீட்டில் மின் ஒயர் திருடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி!

நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. நேற்று இரவு பாழடைந்த ஓட்டு வீட்டில் இருவரும் மின் ஒயர்களைத் திருடுவதற்காக சென்றுள்ளனராம்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையை ஒட்டிய மீட் தெருவில், பயன்பாட்டில் இல்லாமல் நீண்டகாலமாக பூட்டிய நிலையில் பாழடைந்த ஓட்டுக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டட வளாகத்தினுள் புதர்களுக்கிடையே இரண்டு வாலிபர்கள் உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. டி.எஸ்.பி நவீன்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்த இருவரின் உடலும் ஒட்டியவாறு கிடந்தது. அவர்களைப் பற்றி போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில் ஒருவர் பெயர் டான் போஸ்கோ (20) என்பதும், மற்றொருவர் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் (33) என்பதும் தெரியவந்துள்ளது.

இருவரும் சேர்ந்து நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. நேற்று இரவு பாழடைந்த ஓட்டு வீட்டில் இருவரும் மின் ஒயர்களை திருடுவதற்காகச் சென்றிருக்கிறார்கள்.

பலியான டான் போஸ்கோ
பலியான டான் போஸ்கோ

வீட்டிலுள்ள ஓயர்களை கட்டிங் பிளேயரால் வெட்டி சுருட்டி எடுத்துள்ளனர். பின்னர் வெளியே வந்தவர்கள் கைகளில் ஒரு மின்கம்பி தட்டுப்பட்டிருக்கிறது. அது வீட்டின் வெளிபுறத்தில் நிற்கும் மின்கம்பத்திலிருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ள ஸ்டே கம்பியாகும். அவர்கள் அந்த ஸ்டே கம்பியை கட்டிங் பிளேயரால் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர். ஸ்டே கம்பியை எளிதில் வெட்ட முடியாததால் அந்தக் கம்பியைப் பிடித்து இழுத்துள்ளனர். அதில் ஸ்டே கம்பி மின் கம்பத்தில் செல்லும் மின்சார ஒயரில் பட்டு ஷாக் அடித்திருக்கிறது. அதனால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் உடலை மீட்ட வடசேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், "இந்தப் பாழடைந்த கட்டடத்தை ஒட்டியுள்ள பெரிய கட்டடங்களின் அருகில் வந்த சிலர் புதர்களுக்கு மத்தியில் இருவர் கிடந்ததைக் கண்டுள்ளனர். உடனே எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாங்கள் சென்று பார்த்தபோது அவர்கள் மின்கம்பத்திலிருந்து செல்லும் ஸ்டே கம்பியைப் பிடித்தபடி இறந்துகிடந்தனர். எனவே அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்பதை உறுதி செய்தோம்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

டான் போஸ்கோவும், ராபர்ட்டும் பல இடங்களில் திருடுவதையும், அதன் மூலம் மது குடித்துவிட்டு ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளன. ராபர்ட் மீது 2019-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. மீட் தெருவில் பாழடைந்த வீட்டை நோட்டமிட்ட இவர்கள் மின்கம்பியைத் திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேயரை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு