Published:Updated:

கொல்கத்தா: மதுபோதை... உடலில் வெட்டுக் காயங்கள்!-8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறல்

கொல்கத்தாவில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் இரண்டு நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் வடக்கு கொல்கத்தாவில், ஜோரபகன் பகுதியில் 8 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்துவந்தார். கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, தன் வீட்டிலிருந்து அருகிலுள்ள தனது மாமாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பி வராததால், அருகில் தேடியிருக்கிறார்கள் குடும்பத்தினர். சிறுமி உறவினர் வீட்டில் இல்லை என்பதை அறிந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் கவலையடைந்த பெற்றோர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், மோப்பநாயின் உதவியுடன் தேடுதலைத் தொடர்ந்தனர். இந்தநிலையில் அந்தச் சிறுமியின் உடலை அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் கண்டுபிடித்தனர்.

சிறுமியின் உடைகள் கிழிக்கப்பட்டு, உடலில் ஆங்கங்கே கத்தி வெட்டுகள், உடைக்கப்பட்ட பற்கள் எனக் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார். உடலில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருந்தது. காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பதைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்கும், சம்பவ இடத்தில் கிடைத்த கத்தி, பற்கள் உள்ளிட்ட பொருள்களைப் பரிசோதனைக்கும் அனுப்பியிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், அந்தக் கட்டடத்தின் காவலாளியைப் பிப்ரவரி 04-ம் தேதி கைதுசெய்தனர். ``தடயவியல் குழுவின் சான்றுகளின் அடிப்படையிலும், துப்பறியும் துறையினரின் விசாரணையின் அடிப்படையிலும், காவலாளி ராம் குமார் கைதுசெய்யப்பட்டார்" என்று இணை காவல்துறை ஆணையர் சர்மா (Sharma) தெரிவித்தார்.

தொடர் விசாரணையில், இந்தக் குற்றச் சம்பவத்தில் இன்னொருவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் மார்பிள் தொழிற்சாலையில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த ரன்வீர் தாந்தி (அ) ரகுவீர் (43) (Ranvir Tanti @ Raghuvir) திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள், ``ரன்வீரை அந்தச் சிறுமிக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் கொடுத்த சிப்ஸ் மற்றும் பிரியாணியை அவள் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். குமார் மற்றும் ரன்வீர் இருவரும் மதுபோதையில் திட்டமிட்டு சிறுமியைத் தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அவளைக் கொலை செய்வதற்காகக் கத்தியை குமார்தான் எடுத்துக் கொடுத்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்னர், அந்தச் சிறுமியை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். இறுதியாகக் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவிக்கின்றனர்.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

இந்த இருவர் மீதும், ஐ.பி.சி 302 பிரிவு (கொலை), 376-ஏபி (12 வயதுக்குட்பட்ட பெண் மீது பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் 6-வது பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்.

8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ஹேஷ்டேக்கில் மக்கள் இறந்த சிறுமிக்கு நீதி கேட்டு பதிவிட்டுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு