Published:Updated:

`சிங்கம் போல் ஆக்ரோஷமாகப் போராடினர்’ - பாடகர் சித்துவை கொலைசெய்தவர்களின் மரணம் குறித்து கோல்டி பிரர்

கோல்டி பிரர்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்த இருவர் பாகிஸ்தான் எல்லையில் போலீஸாரை எதிர்த்து சிங்கம்போல் போராடினர் என்று ஃபேஸ்புக்கில் தகவல் பரவியிருக்கிறது.

`சிங்கம் போல் ஆக்ரோஷமாகப் போராடினர்’ - பாடகர் சித்துவை கொலைசெய்தவர்களின் மரணம் குறித்து கோல்டி பிரர்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்த இருவர் பாகிஸ்தான் எல்லையில் போலீஸாரை எதிர்த்து சிங்கம்போல் போராடினர் என்று ஃபேஸ்புக்கில் தகவல் பரவியிருக்கிறது.

Published:Updated:
கோல்டி பிரர்

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா, கடந்த மாதம் அவரின் சொந்த கிராமத்துக்கு வெளியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய மூன்று பேர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்டுவிட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய ஜக்ரூப் சிங், மன்பிரீத் மன்னு ஆகிய இரண்டு பேர் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லையிலுள்ள கிராமத்தில் கடந்த வாரம் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீஸாருக்கும் கொலையாளிகள் இரண்டு பேருக்கும் இடையே நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பஞ்சாப் ரெளடிகள் ஒழிப்பு பிரிவு தலைவர் பிரமோத் சென், ``பாடகர் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து இருவரின் நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்துவந்தோம். இருவரும் ஆரம்பத்தில் சரணடைவதாகத் தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

சித்து மூஸ்வாலா
சித்து மூஸ்வாலா

இதற்கிடையே பஞ்சாப் பாடகர் சித்து கொலையில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இரண்டு பேர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தது குறித்து பதிவிட்டிருக்கிறார். அதில், ``ஜக்ரூப் சிங், மன்பிரீத் மன்னு ஆகியோர் போலீஸாரை எதிர்த்து சிங்கம்போல் ஆக்ரோஷமாகப் போராடினர். அவர்கள் 6 மணி நேரம் போலீஸாரைத் தடுத்து நிறுத்திவைத்திருந்தனர். இருவரிடமும் சரணடையும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் மறுத்துவிட்டனர். அதோடு போலீஸாரை எதிர்த்து போராடப்போவதாகத் தெரிவித்துவிட்டனர். சரணடைந்தால் இருவரையும் சிறையிலிருந்து நான் வெளியில் எடுப்பதாகத் தெரிவித்தேன். ஆனால் `போலீஸாரை எதிர்த்து போரிட்டு எங்களது திறமையை உங்களுக்குக் காட்டுகிறோம்’ என்று தெரிவித்தனர். இருவரும் எங்களுக்காக எவ்வளவோ செய்திருக்கின்றனர். அவர்களது குடும்பத்துக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் பாடகர் கொலையில் தொடர்புடைய தீபக் முண்டி என்பவர் மட்டும் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். அவரை பஞ்சாப் போலீஸார் தேடிவருகின்றனர். கோல்டி பிரரும், திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் என்பவரும் சேர்ந்துதான் பாடகர் சித்துவை ஆட்களை நியமித்து கொலை செய்துள்ளனர். இதை கோல்டி பிரர் ஏற்கெனவே பாடகர் கொலை நடந்தவுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!