Published:Updated:

`சொத்துக்காக தந்தையை வெட்டிய மகன்; தங்கைக்கு நேர்ந்த கொடூரம்'- போதையால் நேர்ந்த 2 சம்பவங்கள்

டாஸ்மாக்
டாஸ்மாக்

டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே விருதுநகரில் நடந்தேறிய குற்றச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு தி.மு.க உள்ளிட்ட பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு பெண்கள் முற்றுகைப் போராட்டங்களையும் நடத்தினர்.

உயிரிழந்த அம்சவல்லி
உயிரிழந்த அம்சவல்லி

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கி குடித்தனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே குடும்பத்தில் சண்டை, வாக்குவாதம், கொலை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகிலுள்ள கீழகண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவரின் மனைவி சந்திரமதி. இவர்களுக்கு சண்முகவடிவு, விஜயா, அம்சவல்லி என்ற மகள்களும், கணேஷ்பாபு என்ற மகனும் உள்ளனர். இதில், சண்முகவடிவு, விஜயா ஆகிய மகள்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். அம்சவல்லி, ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கணேஷ்பாபு லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

விசாரணை
விசாரணை

அம்சவல்லியும் அதே ஊரைச் சேர்ந்த கணேசபாண்டியன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்விவகாரம் இரண்டு குடும்பத்துக்கும் தெரிய வர, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு ஆரம்பத்திலிருந்து அம்சவல்லியின் அண்ணன் கணேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளாராம். இந்த நிலையில், மதுஅருந்துவிட்டு வீட்டுக்கு வந்த கணேஷ்பாபு, தங்கை அம்சவல்லியின் திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ஒரு கட்டத்தில் கோபத்தில் மரக் கட்டையால் அம்சவல்லியின் தலையில் தாக்கியுள்ளார்.

பலத்த அடியால் அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார் அம்சவல்லி. இதையடுத்து, அங்கிருந்து கணேஷ்பாபு தப்பியோடினார். திருச்சுழி காவல்நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து கணேஷ்பாபுவை தேடி வருகின்றனர்.

காவல்நிலையம்
காவல்நிலையம்

ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூரில் அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (வயது 80). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். நான்காவது மகன் குருவையா. இவரது அதிக மதுப்பழக்கத்தால் இவரின் மனைவி குருபாக்கியம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். குருவையா, அடிக்கடி தன் தந்தை லட்சுமணபெருமாளுடன் மதுபோதையில் வாக்குவாதம் செய்வாராம். இந்தநிலையில், அதிக மதுபோதையில் இருந்த குருவையா, சொத்தைப் பிரித்து தரும்படி தன் தந்தையிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், லட்சுமண பெருமாள் உயிரிழந்தார். சேத்தூர் காவல்நிலைய போலீஸார், குருவையாவை கைது செய்தனர். விருதுநகரில் ஒரேநாளில் மதுபோதையில் இரண்டு கொலைச் சம்பவங்கள் அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் குடிபோதையில் அடித்து உதைத்து தகராறு செய்ததால் மனைவியும் மகளும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

விசாரணை
விசாரணை

நீலகிரி மாவட்டத்தில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டையால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் முன்விரோதத்தால் பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்திலும் இரண்டு குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதேபோல பல பகுதிகளிலும் ஒரே நாளில் மதுபோதையால் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு