Published:Updated:

ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்! - அதிர்ச்சியில் கோத்தகிரி மக்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலைச் சம்பவங்கள் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sholurmattam police station
Sholurmattam police station

கீழ் கோத்தகிரி பகுதியில் மகனே தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவமும், தன்னை பராமரித்துவந்த சொந்த அத்தையை மருமகனே அடித்து தீ வைத்துக் கொலை செய்த சம்பவமும் நடைபெற்று மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

Moorthi
Moorthi

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி (70). திருமணம் செய்துகொள்ளாத இவர், தேனாடு ஊராட்சி துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி மனைவியை இழந்த இவரின் அண்ணன் மகன் மூர்த்தியை (45), ஆதரவளித்து பராமரித்து வந்தார் விசாலாட்சி. மூர்த்தியின் மதுப் பழக்கத்தினால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற மூர்த்தி தன் அத்தை விசாலாட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

`வாங்கிய ரூ.3 லட்சத்தைத் தருகிறேன், வாங்க!'‍‍ - பிரசாதத்தில் விஷம் வைத்து சென்னை பேராசிரியர் கொலை

இருவருக்கும் வாக்குவாதம் முற்ற ஆத்திரத்தில் தன் அத்தையை கடுமையாகத் தாக்கினார். பலத்த காயமடைந்த விசாலாட்சியை அருகிலிருந்த ஃப்ளெக்ஸ் பேனரால் சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்தார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த விசாலாட்சியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பாதிவழியில் விசாலாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மூர்த்தியைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chinna pandi
Chinna pandi

இதேபோல் கீழ் கோத்தகிரி அருகிலுள்ள சோலூர்மட்டம், நீர் கண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (80). தி.மு.க முன்னாள் நிர்வாகி. இவர், இதே பகுதியில் கோழிக்கடை ஒன்றை நடத்திவந்தார். இவரின் மகன் சின்னபாண்டி, இவரும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். இவரது மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத மனைவி சின்ன பாண்டியைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், தன் தந்தை பாண்டியனின் பராமரிப்பில் வாழ்ந்துவந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சின்ன பாண்டி, தன் தந்தை பாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாக தலையில் தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்ன பாண்டியை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், ``இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் எந்தவித தடையும் இல்லாமல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி பலர் வேலைக்குச் செல்லாமல் 24 மணி நேரமும் போதையிலேயே தள்ளாடுகின்றனர். இதனால் பல சட்டவிரோத செயல்கள், விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Pandian
Pandian

இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ``கீழ் கோத்தகிரி மற்றும் நீர் கண்டி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டு கொலைகளுக்கும் போதை ஒன்றே காரணம். மதுபோதையில் சுற்றித்திரியும் இவர்களைப் பராமரித்த பாவத்துக்காக இரண்டு பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்றார்.

கொலைச் சம்பவங்கள் குறித்து சோலூர் மட்டம் போலீஸார் கூறுகையில், ``இரண்டு சம்பவங்களும் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டது. குற்றச் சம்பவங்கள் தொடர்பாக மூர்த்தி மற்றும் சின்ன பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.