Published:Updated:

` குடும்ப சண்டையால் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்!' -ராமநாதபுரம் அதிர்ச்சி

ஜெயராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜெயராணி வழியிலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரத்தில் மனைவி கொலை
ராமநாதபுரத்தில் மனைவி கொலை

வீட்டைக் காலி செய்ய மறுத்ததால் முதல் மனைவியைக் கொன்ற கணவன், குழந்தை பெற்ற மகளை தாக்கிய கணவனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி-மகன் கைது என தொடர் குற்றச்சம்பங்களால் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறது ராமநாதபுரம்.

ஜெயராணி
ஜெயராணி

ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் கார் டிரைவர் சேதுபதி. இவரின் மனைவி ஜெயராணி. இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இதனிடையே, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சேதுபதி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில், முதல் மனைவி ஜெயராணி வீட்டுக்குச் சென்ற சேதுபதி, அவர் குடியிருந்துவரும் தனது வீட்டைக் காலி செய்து தரச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த சேதுபதி, தான் கொண்டுவந்த கத்தியால் ஜெயராணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். ஜெயராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜெயராணி வழியிலேயே உயிரிழந்தார்.

மறியல்
மறியல்

இதையறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட ஜெயராணியின் உறவினர்கள், கொலையாளி சேதுபதியை உடனடியாக கைது செய்யக்கோரியும், ஜெயராணியின் உடலை விரைவாக பிரேதப் பரிசோதனை செய்ய வலியுறுத்தியும் மருத்துவமனை முன்பாக மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்குவந்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

Vikatan

இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், பரமக்குடியில் குழந்தை பெற்ற மகளைத் தாக்கிய கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவியை எமனேஸ்வரம் போலீஸார் கைது செய்த சம்பவம் நடந்தது.

பரமக்குடி வைகை நகர் பகுதியில் வசித்துவருபவர் காட்டு ராஜா. குவைத்தில் டிரைவராக பணியாற்றிவந்த அவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் பொற்கொடி என்ற மகளும் விஜய் என்ற மகனும் உள்ளனர். பொற்கொடிக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் குழந்தை பிறந்தநிலையில், தன் தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய காட்டுராஜா, வைகை நகரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு குவைத்தில் நிரந்தரமாகக் குடியேறப்போவதாகக் கூறி குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார்.

குழந்தை பெற்ற மகளை காட்டுராஜா தாக்கியதைக் கண்டு ஆவேசமடைந்த முத்துலெட்சுமி கட்டையால் காட்டுராஜாவை தாக்கியிருக்கிறார்.
போலீஸ்

கடந்த 11-ம் தேதி அன்றும் காட்டுராஜா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட மகள் பொற்கொடியை காட்டுராஜா தாக்கியுள்ளார். குழந்தை பெற்ற மகளை காட்டுராஜா தாக்கியதைக் கண்டு ஆவேசமடைந்த முத்துலெட்சுமி, கட்டையால் அவரைத் தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த காட்டுராஜாவை வீட்டின் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு மறுநாள் திறந்துள்ளனர். அப்போது காட்டுராஜா உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாருக்கு தெரியாமல் காட்டுராஜாவின் உடலை அடக்கம் செய்வதற்காக அவர்களது சொந்த ஊரான மேலச்சிறுபோது கிராமத்துக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளமனூர் போலீஸார் காட்டுராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

முத்துலெட்சுமி
முத்துலெட்சுமி

இதுதொடர்பாக முத்துலெட்சுமி, விஜய் ஆகியோரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவர்களை பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

எமனேஸ்வரம் போலீஸார் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி ஜெயலெட்சுமியை கைது செய்தனர்.