Published:Updated:

`இ-பாஸுக்கு வாட்ஸ் அப் குரூப்; அதிகாரிகளுக்கும் தொடர்பு?‘ - திருச்சியில் சிக்கிய இருவர்

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இவர்கள் பணத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடன் எந்தெந்த அதிகாரிகள் தொடர்பிலிருந்தார்கள் என்பதும் குறித்தும் விசாரணை நீள்கிறது.

தமிழகம் முழுவதும் எந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் என ஒரு வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை, போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். அதில், முக்கிய குற்றவாளிகளான திருச்சியைச் சேர்ந்த இருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கிய அதிகாரிகள் சிலர் சிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி ரயில்  நிலையம்
திருச்சி ரயில் நிலையம்

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த உலகத்தையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. அதனைத் தடுக்கும் விதமாகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்பது தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தினமும் 70,000 விண்ணப்பங்கள்... 2 மணி நேர டெட் லைன்... எப்படி வழங்கப்படுகிறது இ-பாஸ்?

இதனால், இ-பாஸ் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், பல இடங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு போலி இ-பாஸ் விநியோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் வந்தன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் செல்ல இ-பாஸ் பெற்றுத் தரப்படும் என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் சென்னை செல்ல 1,500 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

இந்தத் தகவலை ஆதாரங்களுடன் வேலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவரும் ஒரு குழுவை அமைத்து குற்றவாளிகளைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் 350 பேருக்கு மேல் இ-பாஸ் வாங்கிக் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின், கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் ஆகிய இருவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

தமிழகம்: `ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு; தொடரும் இ-பாஸ்!’ - புதிய தளர்வுகளின் முழு விவரம்

என்ன நடந்தது என்று க்ரைம் டீம் போலீஸாரிடம் பேசினோம். ``இவர்கள் பெரிய டீமாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்த நபர்கள் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு இ-பாஸ் வாங்கிக்கொடுத்துள்ளனர். சென்னைக்கு ரூ.1500, திருச்சி டூ சென்னை 1,200 என்று ரேட் கார்ட் போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். அதில் லட்ச லட்சமாகப் பணம் சம்பாதித்ததாகவும் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இவர்கள் பணத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

போலி இ-பாஸ்
போலி இ-பாஸ்

இந்நிலையில், இவர்களுடன் எந்தெந்த அதிகாரிகள் தொடர்பிலிருந்தார்கள் என்பதும் கால் ஹிஸ்டரியை வைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம். அத்தோடு இவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள் யார் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அவரது வீட்டில் இருந்த லேப்-டாப் ஆண்ட்ராய்டு போன்கள் ஆகியவை பறிமுதல் செய்திருக்கிறோம். அதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவிலிருந்த நபர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு சில அதிகாரிகளும் சிக்குவார்கள்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு