Published:Updated:

`எல்லாம் அவன் செயல்!’ - விழுப்புரம் பகுதியில் சாமி வேடத்தில் திருடிய கும்பல் சிக்கியது எப்படி?

சிவன் வேடமணிந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்ளையர்களை பொதுமக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

கொள்ளையர்கள் ஜெயவேல் மற்றும் பிரகாஷ்
கொள்ளையர்கள் ஜெயவேல் மற்றும் பிரகாஷ்

தமிழகத்தில் பிரசித்திபெற்ற திருத்தலங்களில் ஒன்று விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் இருக்கும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில். அமாவாசைதான் இந்தக் கோயிலின் விசேஷ தினம் என்பதால் அன்று லட்சக்கணக்கான மக்கள் நிரம்பி வழிவார்கள்.

மேல்மலையணூர்
மேல்மலையணூர்

அன்றைய தினம் சாமியார்களும், அம்மன் உள்ளிட்ட கடவுளர்களின் வேடமணிந்தவர்களும் அருள்வாக்கு கூறிக் கொண்டிருப்பார்கள். கோயிலுக்குச் செல்லும் மக்கள் அவர்களிடம் பரிகாரங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் காட்சிகளை சர்வசாதாரணமாகக் காணலாம். அன்றைய தினம் கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் பணம் மற்றும் நகைகள் திருடு போகும் சம்பவங்களும் அரங்கேறும்.

இந்த நிலையில், மேல்மலையனூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மயக்கப்பொடி தூவியும், தீர்த்த நீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் வீடுகளில் உள்ள நகை, பணம் போன்றவற்றைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. போலிச் சாமியார்களிடம் ஏமாந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்த பொதுமக்கள் அதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்
மேல்மலையனூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொகுசு காரில், சிவன் வேடத்தில் வந்திறங்கிய 2 சாமியார்கள் தாங்கள் திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து வந்திருப்பதாகவும், இந்தப் பகுதியில் ஆசிரமம் அமைக்க இடம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். திருவண்ணாமலை சாமியார்கள் என்பதால் குளிர்பானம், உணவு என அவர்களை நன்றாக உபசரித்த மக்கள், அவர்களிடம் அருள்வாக்கும் கேட்டிருக்கிறார்கள். அவர்களும், `எல்லாம் அவன் செயல்… மங்களம் உண்டாகட்டும்’ என்று கூறி அருள்வாக்கும் தந்திருக்கிறார்கள்.

கொள்ளையர்கள் ஜெயவேல் மற்றும் பிரகாஷ்
கொள்ளையர்கள் ஜெயவேல் மற்றும் பிரகாஷ்

அப்போது ஈயகுணம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரும் அந்தச் சாமியார்களை வீட்டுக்கு அழைத்து ஆசீர்வாதம் செய்யச் சொல்லியிருக்கிறார். அதன்படி வீட்டுக்குப் போன அந்தச் சாமியார்கள், முனுசாமிக்கு அருள்வாக்கு கூறியதோடு, அவருக்கு தீர்த்த நீரையும் கொடுத்திருக்கிறார்கள். தீர்த்த நீரில் மயக்க மருந்து கலந்திருந்ததால் முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனே மயக்கமடைந்தார்கள். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், வெளியே தெரியக் கூடாது என்று நினைத்த முனுசாமி அப்படியே விட்டுவிட்டார்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் வேலை விஷயமாக பக்கத்து கிராமத்துக்குச் சென்ற முனுசாமி, அங்கு சிவன் வேடத்தில் இருந்த அதே சாமியார்கள் மக்களுக்கு அருள்வாக்கு கூறிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அந்த மக்களிடம் தனக்கு நடந்தவற்றைக் கூறியதால் அனைவரும் சேர்ந்து அந்தப் போலிச் சாமியார்களை வளைத்துப் பிடித்தபோது உடன் வந்திருந்த மற்ற 3 பேர் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்த இருவரை மட்டும் வளத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜெயவேல் (50) மற்றும் போளூர் தாலுகா குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த காசி மகன் பிரகாஷ் (35) என்பதும் தெரியவந்தது.

போலிச் சாமியார்கள்
போலிச் சாமியார்கள்

மேலும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருடுவதையும், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குறிப்பாக ஜெயவேல் மீது சிவன் வேடமணிந்து தொடர் திருட்டில் ஈடுபட்டதாக போளூர் காவல் நிலையத்தில் 2 முறை குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. முனுசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை தப்பியோடிய 3 பேரைத் தேடிவருகிறது.