சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கீழ்ப்பாக்கம் பகுதி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் திலிப் குமார் என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட திலிப் குமார் முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. திலிப் குமாருக்கு கஞ்சா எப்படிக் கிடைத்து என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே டி.எஸ்.பி அலுவலகத்தில் வேலை பார்க்கும் காவலர் சக்திவேல், தமிழக காவல்துறை சைபர் க்ரைம் பிரிவில் வேலை பார்க்கும் காவலர் செல்வக்குமார் ஆகிய இரண்டு காவலர்களின் மூலம் இவருக்கு கஞ்சா கிடைத்தது தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தத் தகவலை அடுத்து அந்தக் காவலர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 7-ம் தேதி ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு கிலோ கஞ்சாவை காவலர் சக்திவேல் எடுத்து செல்வக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த ஒரு கிலோ கஞ்சாவை காவலர் செல்வக்குமார், திலிப் குமாரிடம் விற்பனை செய்யக் கொடுத்தது தெரியவந்திருக்கிறது. இவர்கள் கடத்திவரப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்தார்களா... அல்லது கஞ்சா விற்பனை கும்பலோடு இவர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இரண்டு காவலர்கள், முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் ஆகிய மூவர் கஞ்சா விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக, ``போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்தச் சமயத்தில், காவலர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.