Published:Updated:

`குண்டர் சட்டத்தில் ஸ்ரீதர் ஆதரவாளர்கள்; தலைமறைவில் தணிகா டீம்!'- கதிகலங்கும் காஞ்சி

தியாகு மற்றும் தினேஷ்
தியாகு மற்றும் தினேஷ்

தினேஷ் சிறைக்குள் இருந்தே கூலிப்படையை இயக்கக் கூடியவர். இதனால் தணிகா மற்றும் அவரின் கூட்டாளிகளால் நிம்மதியாக உலவமுடியவில்லை.

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரவுடி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் பதற்றத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கோலோச்சிவந்த ரவுடி ஸ்ரீதர், 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தின் அடுத்த டான் யார் என்பதில் அவரின் ஆதரவாளர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டது. ஸ்ரீதரின் கார் ஓட்டுநர் தினேஷ் மற்றும் ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவுக்கும் இடையே பல வருடங்களாகப் பகை இருந்து கொண்டிருக்கிறது. இதனால் இருதரப்பிலும் கொலைகள் நடந்து கொண்டிருந்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருதரப்பிலும் தொடர்ந்து நடைபெற்ற கொலைகள் காஞ்சிபுரத்தை அதிர்ச்சியடையச் செய்தது.

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர்
காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர்

பொதுமக்களும் வியாபாரிகளும் ரவுடிகளைக் கண்டு அச்சப்படத் தொடங்கினர். அவர்களைக் கைது செய்ய காவல்துறையினருக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த மாதம் தினேஷ் மற்றும் `பொய்யாகுளம்’ தியாகு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தினேஷ் மீது கொலை, கொலை மிரட்டல், ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 24 வழக்குகளும் தியாகு மீது கொலை, கொலை மிரட்டல் உள்பட 51 வழக்குகளும் உள்ளன.

தினேஷ் வேலூர் சிறையிலும் தியாகு பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இருவரும் ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்குக் காஞ்சிபுரம் எஸ்.பி சாமுண்டீஸ்வரி அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார் கலெக்டர். இருவரும் பலமுறை குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

`யார் அடுத்த ஸ்ரீதர்?'- அதிகாரப் பகையில் காஞ்சிபுரத்தைப் பதற வைக்கும் அடுத்தடுத்த கொலைகள்!

அதுபோல் தினேஷுக்கு எதிரான தணிகா டீம் தலைமறைவாக இருக்கிறது. இவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பதால் காஞ்சிபுரத்தில் பதற்றம் தொடர்ந்த நிலையிலேயே உள்ளது. தினேஷ் சிறைக்குள் இருந்தபடியே கூலிப்படையை இயக்கக் கூடியவர். இதனால் தணிகா மற்றும் அவரின் கூட்டாளிகளால் நிம்மதியாக உலவமுடிவதில்லை. இன்டர்நெட் காலில் தணிகா எல்லோரிடமும் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.

தணிகா
தணிகா

இதனால் தணிகா இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. `தணிகா விரைவில் சரணடையாவிட்டால் காவல்துறையினர் வேறுவிதமான முடிவுகளை எடுக்கலாம்' என காவல்துறை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு