Published:Updated:

`நாட்டு வெடிகுண்டு, கத்தி, பழிக்குப்பழி!'- போலீஸைக் கதிகலக்கும் காஞ்சி கேங் வார்

செய்யாறில் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்ட தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ்குமார் கொலைக்குப் பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை

காஞ்சிபுரம் ரவுடிகள் தினேஷ் மற்றும் பொய்யாகுளம் தியாகு ஆகிய இருவரையும் நேற்று குண்டர் சட்டத்தில் அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் தினேஷின் ஆதரவாளர்கள் அடுத்து இருவரைக் கொலை செய்து காவல்துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

தியாகு, தினேஷ்
தியாகு, தினேஷ்

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ல் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். ஸ்ரீதர் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என ஸ்ரீதரின் டிரைவர் தினேஷ் மற்றும் உறவினர் தணிகா ஆகியோரிடையே நடைபெறும் `கேங் வார்’ காஞ்சிபுரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே உள்ள செய்யாறு பகுதியில் சதீஷ்குமார் என்பவர் பேருந்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் மீது தணிகா ஆதரவாளர் வழக்கறிஞர் சிவக்குமாரை வெட்டிய வழக்கு உள்ளது.

இதற்குப் பழி தீர்ப்பதற்காக தினேஷ் ஆதரவாளர்கள், தணிகாவின் ஆதரவாளர்களான காஞ்சிபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை வெட்டினார்கள். இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த மாதம் தினேஷ் மற்றும் `பொய்யாகுளம்’ தியாகு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் நேற்று அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தினேஷ் சிறையிலிருந்தே தன்னுடைய நெட்வொர்கை இயக்குபவர். இதனால் தணிகா ஆதரவாளர்களைச் சிறையிலிருந்தே பழிதீர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட கோபி மற்றும் ஜீவா
கொலை செய்யப்பட்ட கோபி மற்றும் ஜீவா

இந்த நிலையில், இன்று தணிகாவின் நெருங்கிய கூட்டாளிகளான `மார்க்கெட்’ ஜீவா மற்றும் கோபி ஆகியோரை தினேஷின் ஆதரவாளர்கள் கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பன்னூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவர்களை நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசி நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். நிலைதடுமாறி கீழே விழுந்தவர்களை வெட்டிக் கொன்றுள்ளனர். இருவரின் உடலையும் கைப்பற்றி திருவள்ளூர் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

செய்யாறில் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்ட தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ்குமார் கொலைக்குப் பழிக்குப்பழியாக இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.