சென்னை: ஐஸ்கிரீம் முதல் லேப்டாப் வரை! - அடுத்தடுத்து நடந்த திருட்டால் அதிர்ச்சி

சென்னை ஆவடியில் ஒரே நாள் இரவில் தொடர்ச்சியாக 2 இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை ஆவடி, பருத்திப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பெலிக்ஸ் ( 36). இவர் ஆவடி, கன்னிகாபுரம், காந்தி தெருவில் பால் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கம்போல் இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது 30 பால் பவுடர் பாக்கெட்டுகள், 16 ஐஸ் கிரீம்கள் மற்றும் கடையிலிருந்த 1,000 ரூபாய் ஆகியவை கொள்ளைப்போயிருந்தது.

இதுகுறித்து பெலிக்ஸ் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆவடி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இன்னொரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஆபரேட்டர் அலுவலகத்திலும் நேற்றிரவு கொள்ளை நடந்துள்ளது. அங்கு வேலை செய்து வரும் அம்பத்தூர், புதூர் பகுதியைச் சேர்ந்த அகமதுல்லா (38) இன்று காலை அலுவலகத்தை திறக்க சென்றார். அப்போது கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 4 மடிக்கணினிகள், ஒரு டிவி ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே இரவில் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.