Published:Updated:

`காவலுக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை!' - கோத்தகிரியை உலுக்கிய பழங்குடிகள் கொலை

இருவரது கழுத்துப்பகுதியிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்து. அருகிலேயே இரண்டு சடலமும் கிடந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் இறந்தனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா எனத் தெரியவில்லை.

sholur mattam police station
sholur mattam police station

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சோலூர் மட்டத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது மெட்டுக்கல் இருளர் பழங்குடியினர் கிராமம். அடர்வனத்தையொட்டியுள்ள இந்தக் கிராமத்தில் 40 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள மேரக்காய் தோட்டத்தில் இரண்டு ஆண்சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர் ஊர்மக்களை அழைத்து வந்தார். ஊர் மக்கள் சோலூர் மட்டம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ராமச்சந்திரன், திம்மன்
ராமச்சந்திரன், திம்மன்

சாலை வசதிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் போதிய அளவு இல்லாத இந்தக் கிராமத்துக்கு பல மணி நேரம் தாமதமாகவே சென்றனர். மேலும், அடர் வனத்தையொட்டிய பகுதியென்பதால் அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது இரண்டுபேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), திம்மன் (19) ஆகிய இருவர்தான் என‌ உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஊர்மக்கள், "இறந்த இருவரும் ஊருக்கு வெளியில் உள்ள தோட்டத்தில் இரவு காவலுக்குச் செல்வது வழக்கம், இரவில் தங்கி வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர். இன்று காலை நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. கடைசியில் இங்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தனர்" என்கின்றனர்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்

இது குறித்து காவல்துறையினர், "இருவரது கழுத்துப் பகுதியிலும் பலத்த வெட்டுக்காயகள் இருந்தன. அருகிலேயே இரண்டு சடலமும் கிடந்தன. இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் இறந்தனரா அல்லது வேறு யாராவது கொலை செய்தனரா எனத் தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.