Published:Updated:

`இங்க வந்து நில்லுங்க!' - பயணிகள் அசந்த கேப்பில் அதிர்ச்சிகொடுத்த தூத்துக்குடி பெண்கள்

ஓடும் பேருந்தில் நெரிசலைப் பயன்படுத்தி சங்கிலியைத் திருடிய தூத்துக்குடி பெண்கள் இருவர் வசமாகச் சிக்கினர். இவர்களிடம் இருந்து களவு போன சங்கிலியைப் பறிமுதல் செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நகை திருட்டில் ஈடுபட்ட பெண்கள்
நகை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சம்பை முத்துரெகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்வர் குஞ்சரம் (62). நேற்று காலை இவர் தனது ஊரிலிருந்து பேருந்தில் ராமநாதபுரம் வந்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நின்றபடியே பயணித்துள்ளார் குஞ்சரம். அந்நேரத்தில் பர்தா அணிந்த இரு பெண்கள் தங்களுக்கு இடையே வந்து சிரமம் இன்றி நிற்குமாறு கூறியுள்ளனர்.

நகைத் திருட்டு நடந்த ராமநாதபுரம் பேருந்து நிலையம்
நகைத் திருட்டு நடந்த ராமநாதபுரம் பேருந்து நிலையம்
உ.பாண்டி

இதை நம்பி அவர்களுக்கு இடையே நின்றுகொண்டிருந்த குஞ்சரம் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நூதனமாகத் திருடியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்துக்குள் பஸ் வந்துவிட்டது. அங்கு பஸ் நின்ற நிலையில் அதிலிருந்த பெண்கள் இருவரும் வேகமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் குஞ்சரத்தின் சங்கிலியைப் பெண்கள் திருடியதை பயணிகள் சிலர் கவனித்துள்ளனர்.

இதையடுத்து சங்கிலி திருடப்பட்டது குறித்து குஞ்சரத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாகச் செயல்பட்டு பேருந்தில் இருந்து இறங்கிய இருவரில் ஒரு பெண்ணைப் பிடித்தபடி கூச்சலிட்டார். இதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கிருந்து ஓடிய மற்றொரு பெண்ணையும் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் கேணிக்கரை போலீஸார் வசம் பயணிகள் ஒப்படைத்தனர்.

நகை திருட்டு பெண்கள்
நகை திருட்டு பெண்கள்
உ.பாண்டி

போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லீம் பெண்கள்போல் பர்தா அணிந்து அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற செல்வி, இசக்கியம்மாள் எனத் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச் செயினைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், இவர்கள் இருவரும் எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.