திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி துரைசாமி நகரைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (39). பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து கோபிகிருஷ்ணன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 3), வேலம்பாளையத்தை அடுத்த எடிசன் நகர் பகுதியில் உள்ள புதரில் கோபிகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை தொடர்பாக வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இக்கொலையில் மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற மருதுபாண்டி (23), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பரணிதரன் (26) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், `நாங்கள் இருவரும் திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறோம். ஆபாச செயலி மூலம் கோபிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. பலமுறை கோபிகிருஷ்ணன் எங்களுடன் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு, எடிசன் நகரில் உள்ள மறைவான பகுதிக்கு கோபிகிருஷ்ணனை வர வழைத்தோம். அங்கு மூவரும் மது குடித்ததுடன், எங்கள் இருவரிடமும் கோபிகிருஷ்ணன் தனித்தனியாக உறவில் ஈடுபட்டார். அதற்காக அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் கேட்டோம்.
பணத்தை கூகுள் பே மூலம் அனுப்புவதுபோல் நடித்த கோபிகிருஷ்ணன், அதற்கான ரகசிய எண்ணை வேண்டுமென்றே மூன்று முறை தவறாக பதிவிட்டார். இதனால், அவருடைய கூகுல் பே கணக்கு லாக் ஆகிவிட்டது.

இதனால், ஆத்திரமடைந்து மது பாட்டிலால் அடித்தும், மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும் கோபிகிருஷ்ணனை கொலை செய்தோம்” என்று தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.